தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்...கனமழை இருக்காம்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் சேலத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.அதிலும் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சென்றதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.சேலத்தில் நேற்று இரவு மட்டும் 84.3 மில்லி மீட்டர் மழை அதாவது 8 சதவீதம் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.