தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கன மழை...மஞ்சள் அலர்ட் : வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்
May 11, 2024,05:10 PM IST
டெல்லி: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த 2 மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கோடை மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த கோடை மழையால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறையவும் தொடங்கியுள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மே 11 மற்றும் 12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.