Yearender 2024: இந்தியர்கள் விழுந்து விழுந்து எதைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள் பாருங்க!
டெல்லி: 2024ம் ஆண்டு அதிகம் கூகுள் செய்யப்பட்ட டாப்பிக்குகள் குறித்த ஒரு சுவாரஸ்யமான பட்டியல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் குறித்து அதிக அளவில் தேடிப் பார்த்த இந்தியர்கள் பாஜக, காங்கிரஸ் கட்சி குறித்தும் அதிக அளவில் கூகுள் செய்து பார்த்துள்ளனர்.
டாப் 10 பட்டியலில் 5 இடங்கள் விளையாட்டுத்துறைக்கு போயுள்ளன. அதற்கு அடுத்து அதிகமாக தேடிப் பார்த்த டாப்பிக் என்றால் அது அரசியல்தான். தனி நபர்கள் பட்டியலில் ரத்தன் டாடா மட்டுமே டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
2024ம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் வழக்கம் போல மலைப்புதான் வருகிறது. எப்படித்தான் இத்தனை சம்பவங்களையும் தாண்டி வந்தோமோ என்று அயர்ச்சிதான் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக 2024ம் ஆண்டு விடை பெறவுள்ளது.
இந்த ஆண்டில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட டாப்பிக்குகள் குறித்த ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலை ஆக்கிரமித்துள்ளது விளையாட்டுதான். குறிப்பாக கிரிக்கெட்தான் அதிக அளவில் இந்தியர்களால் தேடிப் பார்க்கப்பட்டுள்ளது. டாப் 10 பட்டியலில் 5 இடங்கள் விளையாட்டுக்குப் போயுள்ளன. 3 இடங்கள் அரசியலுக்குப் போயுள்ளன. ஒரு இடம் வானிலை தொடர்பானது. இன்னொரு இடம் தனி நபர் பிரிவு.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஐபிஎல் ஆகும். ஐபிஎல் குறித்து மக்கள் அதிக அளவில் இந்த ஆண்டு தேடிப் பார்த்துள்ளனர். இரண்டாவது இடம் கிரிக்கெட்டுக்கே.. அதாவது டி20 உலகக் கோப்பை குறித்து தேடிப் பார்த்துள்ளனர் இந்தியர்கள். 3வது இடத்தில் பாஜக வருகிறது. பாஜக குறித்த தேடலுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
2024 தேர்தல் முடிவுகள் என்ற டாப்பிக் அதிகம் தேடப்பட்ட 4வது டாப்பிக்காக இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் காரணமாக இந்த டாப்பிக் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. 5வது இடம் ஒலிம்பிக்ஸ் 2024 க்குக் கிடைத்துள்ளது. 6வது இடத்தில் அதீத வெப்பம் என்ற பதம் தேடப்பட்டிருக்கிறது.
ரத்தன் டாடா குறித்த தேடலுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்த தேடலுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
இதுதவிர 9வது இடத்தில் புரோ கபாடி லீக் குறித்தும், 10வது இடத்தில் இந்தியன் சூப்பர் லீக் குறித்த தேடலும் இடம் பிடித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்