Yearender 2024.. வருஷம் முடியப் போகுது.. இந்த ஆண்டை கலக்கிய டாப் 10 தமிழ்ப் படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு வருடமும் உச்ச நட்சத்திரங்கள், வளர்ந்த நடிகர்கள், வளரும் நடிகர்கள் என நிறைய படங்கள் வெளியாவது வழக்கம். இதில் ஒரு சில படங்கள் மட்டுமே மக்களிடையே பேராதரவை பெற்று வசூலை வாரிக் விக்கின்றன. அந்த வரிசையில் இதுவரை இத்தனை ஆண்டுகளாக வந்த படங்களை விட இந்த வருடம் மனித உணர்வுகளை மதிக்கும் விதமாக சாமானிய மக்களின் கதையை மையமாகக் கொண்டு பல்வேறு படங்கள் வெளியாகி உள்ளன.
அப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பெற்றுள்ளது. இந்த ஆண்டு நிறைய தமிழ்ப் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக அமரன், மகாராஜா, கோட் உள்ளிட்ட பல்வேறு படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த வருடத்தில் டாப் 10 வசூல் படங்கள் பட்டியலை திரைப்பட தகவல் தொகுப்புக் களமான ஐஎம்டிபி அப்டேட் செய்து வருகிறது. அதன் லேட்டஸ்ட் அப்டேட்டில் உள்ளபடி இந்த ஆண்டின் டாப் 10 படங்கள் பட்டியல் வருமாறு:
தி கோட்:
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், வெளியான திரைப்படம் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதில் பிரபுதேவா மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், ஜெயராம், யோகி பாபு, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த் இப்படத்தில் இடம்பெறுகிறார் என்ற தகவலை அடுத்து மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என பழமொழிகளில் வெளியானது. ரசிகர்களின் பேராதரவில் வெற்றி நடைபோட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் உலகளவில் 460.3 கோடி வசூல் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
அமரன் படம்:
கேப்டன் மேஜர் முகுந்தின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ஒரே வாரத்தில் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் காதலின் வெளிப்பாடு, பிரிவு, அழுகை, கணவன் மனைவி ஒற்றுமை என அவர்களுக்குள் ஏற்படுவதை எதார்த்தமாக வெளிப்படுத்தி சிறந்த நடிப்பு என்ற பெயரைப் பெற்று விட்டனர். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று உலக அளவில் 330.2 கோடி வசூலில் சாதனை படைத்தது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
வேட்டையன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறத் தவறியது. சூப்பர் ஸ்டாரின் படம் என்றாலே, படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதே போன்று சூப்பர் ஸ்டாருக்காகவே படம் சென்றவர்கள் பலர். படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் வசூலை கடுமையாக பாதித்து விட்டன. உலக அளவில் 255.8 கோடி வசூல் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மகாராஜா:
2024ம் ஆண்டின் மிகப் பெரிய சர்ப்பிரைஸ் வெற்றி என்றால் அது மகாராஜாதான். இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் கதைக்களம் அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. அதிலும் படத்தின் இறுதியில் தான் இயக்குனர் லிஸ்ட் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார். குறிப்பாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் அலட்டல் இல்லாத எதார்த்தமான நடிப்பு படத்தை வெற்றி பெற செய்தது. பல்வேறு தரப்பிலும் பாராட்டை வாரி குவித்தது .உலகளவில் 170.4 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் சீனாவிலும் இப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம். அங்கும் அது ரூ. 100 கோடி வசூலை நோக்கிச் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயன்:
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் தான் ராயன். இது தனுஷின் 50வது திரைப்படம். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் தனுஷ், தம்பி தங்கையை காக்க எடுத்த முயற்சிகள் என்ன என்பதை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உருவான ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்று உலக அளவில் 156 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. தனுஷுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப் படம் இது.
இந்தியன் 2:
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன், ரகுல் பிரீத்தா சிங், சித்தார்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அனைத்து மொழிகளிலும் வெளியான இந்தியன்2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியையே சந்தித்தது. ஏனெனில் இந்தியன் படம் எந்த அளவுக்கு புகழ் பெற்றதோ அதேபோல் இந்தியன் 2 திரைப்படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காகவே தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் கொண்டாட தயாராகினர். ஆனால் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தின் கட்டமைப்புகள், வசனங்கள், இசை, என அனைத்திலும் கடுமையான தொய்வு ஏற்பட்டது. இதனால் இப்படம் படுதோல்வியே தழுவியது. இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் 250.9 கோடி வசூலித்தது.
கங்குவா:
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் தான் கங்குவா. சூர்யா நடிப்பில் இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டது. படத்தின் ரிலீசுக்கு முன்பு படத்தைக் குறித்து பல்வேறு தகவல்களை பட குழு வெளியிட்டது. இதனால் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா ரிலீசுக்கு நாடே எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் வெளிவந்து இப்படத்தின் சவுண்ட் எபெக்ட் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்கள், அதிருப்திகள் எழுந்ததாலும், நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாகவும் படம் மிகப்பெரிய வரவேற்பு பெறவில்லை. உலக அளவில் 105.1 கோடி வசூலை பெற்றது.
அரண்மனை:
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடி கலந்த ஹாரர் திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் அரண்மனை 4 திரைப்படம் வித்தியாசமான கதைக் களத்துடன் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருந்தது.
இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தமன்னா மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 100.8 கோடி வசூலில் சாதனை படைத்தது.
அயலான்
2024ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை. அமரன் படத்துடன் அயலான் படமும் வசூல் சாதனை படைத்து சிவகார்த்திகேயனை மகிழ்வித்தது. அயலான் திரைப்படம் 81.4 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படம் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது.
கேப்டன் மில்லர்:
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் அதற்கு முன்பாக அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய படம் கேப்டன் மில்லர். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. கேப்டன் மில்லர் படம் மட்டும் உலக அளவில் 78.2 கோடி வசூலில் பத்தாவது வசூல் சாதனை என்ற இடத்தை பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்