Yearender 2024.. அவ்வப்போது அதிரடி.. திடீர் திடீரென சரிவு.. 2024ல் எப்படி இருந்தது தங்கம் விலை?

Meenakshi
Dec 29, 2024,05:14 PM IST

சென்னை: 2024ம் ஆண்டு விடை பெறப் போகிறது. மறக்க முடியாத பல நினைவுகளை இந்த வருடம் கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானது தங்கம்.  தங்கத்தின் விலையும் இந்த ஆண்டு மறக்க முடியாததாக இருந்தது என்பது உண்மை.


உயர் உலோகங்களில் தங்கம் ஓர் உன்னதமான உலோகமாக கருதப்படுகிறது. தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். தங்கம் வரலாற்று ரீதியில் அரிய உலோகமாகவே கருதப்படுகிறது. தங்கத்தினை காரட் என்ற அலகால் மதிப்பிடப்பட்டு வருகிறது. 24 கேரட் தங்கம் தூய தங்கமாகும். இந்த தூய தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது. தங்கத்துடன் செம்பு கலக்கப்பட்டு 22 கேரட் முதல் 9 கேரட் வரையிலான தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படுகின்றன.


தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம் வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும் தன்மை கொண்டது தங்கம். காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. துருப்பிடிக்காது. எனவே எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். தங்கம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் இதனை மங்ககரமான பொருளாக பார்க்கின்றனர்.




இத்தகைய தங்கம் சங்க காலம் முதல் இன்று வரை தமிழ் நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் பொருளாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. அதுமட்டுமின்றி தங்கம் ஆடம்பர பொருளாகவும் இருந்து வருகிறது. பண்டைய காலம் முதல் தற்போது வரை தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் எந்த ஒரு விஷேசம், நல்ல நாள் என்றாலும், தங்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. திருமணத்தின் போது பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு தங்களது வசதிக்கு ஏற்றார் போல நகைகளை அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்பும் வழக்கம் பழங்காலத் தொண்டு இன்று வரை இருந்து வருகிறது.


இப்படிப்பட்ட தங்கம் சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை தற்போது  உயர்ந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த புத்தாண்டை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த 2024ம் ஆண்டு நகை விலை  எப்படி  இருந்தது என்பது குறித்து காண்போம்.


2024 ஜனவரியில் தங்கம் விலை


கடந்த ஜனவரி மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமுமாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 2ம் தேதி அந்த மாதத்திலேயே அதிகமாக ஒரு கிராம் ரூ.5920க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி ரூ.5780 ஆக குறைந்து இருந்தது. இந்த விலையை வைத்து பார்க்கும் போது நகை விலை ஜனவரியில் பெரிய அளவில் மாற்றம் இன்றி இருந்துள்ளதை அறியலாம்.


2024 பிப்ரவரியில் தங்கம் விலை


2024ம் ஆண்டு பிப்ரவரியிலும் ஏற்ற இறங்களுடன் தான் தங்கம் விலை இருந்து வந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின்  விலை கடந்த பிப்ரவரி 15ம் தேதி அந்த மாதத்தில் குறைந்த விலையாக  5,740 ரூபாய்க்கும், பிப்ரவரி 2ம் தேதி அந்த மாதத்திலேயே அதிக விலையாக ரூ.5,890க்கும் விற்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றத்திற்கும் குறைவிற்குமான வித்தியாசமாக ரூ.150 தான் இருந்துள்ளது.


2024 மார்ச் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி 5,840 ரூபாய்க்கு குறைந்திருந்த தங்கம், மார்ச்  29ம் தேதி 6,390 ரூபாயாக அதிகரித்து இருந்தது. இந்த மாதத்தில் தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த மாதத்தில் முதல் தேதியில் தங்கம் விலை குறைந்தும், அதே  மாதத்தின் இறுதியில் அதிகரித்தும் இருந்து வந்துள்ளது.




2024 ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை


2024 ஏப்ரல் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி 6,430 ரூபாய்க்கு குறைந்திருந்த தங்கம், ஏப்ரல் 19ம் தேதி அதிக விலையாக 6,890க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த மாதத்தில் மட்டும் நகை விலை கிட்டதட்ட ரூ.460 வித்தியாசமாக இருந்து வந்துள்ளது.


2024 மே மாதத்தில் தங்கம் விலை


2024ம் தேதி மே மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம், அன்றைய மாதம் 20ம் தேதி அதிகமாக ரூ.6,900க்கும்,  குறைவான விலையாக மே 6ம் தேதி ரூ.6,610க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த மே மாதத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி, நகை விலை இருந்து வந்துள்ளது.


2024 ஜூன் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த 22 கேரட் தங்கம் ஜூன் 6ம் தேதி அந்த மாதத்தின் அதிக விலையாக ரூ. 6,800 ரூபாய்க்கும், குறைவான விலையாக ஜூன் 27ம் தேதி 6,625க்கும் விற்கப்பட்டது.


2024 ஜூலை  மாதத்தில் தங்கம் விலை


2024 ஆண்டு ஜூலை மாதத்தில் தான் மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இதனால், அந்த மாதத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இந்த விலை குறைவால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், 22 கேரட் தங்கத்தின் விலை ஜூலை 30ம் தேதி அந்த மாதத்தில் குறைவாக ரூ.6,385க்கும், ஜூலை 17ம் தேதி அந்த மாதத்தில் அதிக விலையாக ரூ.6,920க்கும் விற்கப்பட்டு வந்துள்ளது. இந்த மாதத்தில் தங்கம் விலை கிராமிற்கு ரூ.535 வித்தியாசத்தில் இருந்துள்ளது.


2024 ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை


2024 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி  22 கேரட் தங்கத்தின் குறைந்த விலையாக ரூ.6,330க்கும், அதிக விலையாக ஆகஸ்ட் 28, 29ம் தேதி ரூ.6, 715க்கும் விற்கப்பட்டு வந்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்ற இறக்கத்திற்கு இடையேயான வித்தியாசமாக ரூ.385 ஆக இருந்துள்ளது.


2024 செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து தான் இருந்தது. அதன்படி, அந்த மாதத்தில் அதிக விலையாக செப்டம்பர் 27ம் தேதி ரூ.7100க்கும், குறைந்த விலையாக செப்டம்பர் 2 3 4 5 ஆகிய 4 நாட்களில் ரூ.6,670 ஆகவும் நகை விலை  இருந்துள்ளது.




2024 அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தங்கம் ஒரு கிராமின் விலை குறைவும் அதிகமுமாக 7000த்தை கடந்து புதிய உச்சம் தொட்டது என்றே சொல்லலாம். 22 கேரட் தங்கம் அக்டோபர் மாதத்தில் 10ம் தேதி குறைவான விலையாக ரூ.7,025 ஆகவும், இந்த மாதத்தில் அதிகமான விலையாக  31ம் தேதி ரூ.7,455 ஆக இருந்தது.


2024 நவம்பர் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் 22 கேரட் தங்கத்தின் குறைந்த விலையாக ரூ.6,935 நவம்பர் 14,16.17 ஆகிய 3 நாட்கள் குறைந்திருந்தது. நவம்பர் மாதத்தில் அதிக விலையாக நவம்பர் 1ம் தேதி ரூ.7,385ஆக இருந்துள்ளது. 


2024 டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை


2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குறைவு அதிகமும் 7000த்தை தாண்டியே இருந்துள்ளது.டிசம்பர் 2ம் தேதி  குறைந்த விலையாக ரூ.7090க்கும், அதிக விலையாக டிசம்பர் 11,12 ஆகிய தேதிகளில் ரூ.7285 ஆக இருந்துள்ளது.


ஆக மொத்தத்தில் இந்த வருடத்தில் ஜனவரியில் தங்கம் விலை மிகக் குறைவாகவும், அக்டோபர் மாதத்தில் மிக அதிகமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்