இரட்டை சதங்களை அடித்து.. 209ரன்களை குவித்த.. யஷ்ஸ்வி ஜெயஸ்வால்.. சூப்பர் ரெக்கார்ட்!

Manjula Devi
Feb 03, 2024,03:14 PM IST

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 209 ரன்களை குவித்து சில புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.


இந்தியா இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.


நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் ஜெய்ஸ்வால் 179 ரன்கள் மற்றும் அஸ்வின் 5 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று இந்தியா தொடர்ந்தது. அஸ்வின் 20 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மறு முனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ரன்களைக் குவித்தார். ஜெய்ஸ்வால் 18 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்  என மொத்தம் 209 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  இறுதியில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓவர்களில் 396 ரன்கள் எடுத்தது.




தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் நான்கு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.


மிகக் குறைந்த வயதில், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் எடுத்த 3வது இந்திய வீரர் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது 37 நாட்களாகிறது. இதற்கு முன்பு வினோத் காம்ப்ளி தனது 21 வயது 277 நாட்கலில் 1993ம் ஆண்டு இரட்டை சதம் போட்டிருந்தார். அதுவும் அவர் 22 வயதைத் தொடுவதற்கு முன்பு 2 இரட்டை சதம் போட்ட சாதனையாளர் ஆவார்.


இதற்கு அடுத்த இடத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளார். இவர் 1971ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இரட்டை சதம் போட்டபோது அவரது வயது 21 வருடம் 277 நாட்கள்தான்.


ஜெய்ஸ்வால் இன்று இன்னொரு சாதனையும் படைத்தார். டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக சிக்சர்கள் அடித்த 3வது வீரராக அவர் உருவெடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.