இஸ்மாயில் ஹனியேவுக்கு நெருக்கமான.. யாஹ்யா சின்வார்.. ஹமாஸ் புதிய தலைவராகிறார்
பெய்ரூட்: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்தாண்டு தாக்குதல் நடத்தியதில் யாஹ்யா சின்வார் முக்கிய பங்குவகித்தவர். இவருடன் முகமது டேயிஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோரும் முக்கிய பங்கு வகித்தவர்கள். இந்த 3 பேரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் மூளையாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேபிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. 3 முக்கியத் தலைவர்களில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இவர் பொது இடங்களில் தோன்றாமல் இருந்து வந்துள்ளார். ஹமாஸ் அரசியல் பிரிவுக்கு மட்டுமல்லமல், மொத்த அமைப்புக்கும் புதிய தலைவராக யாஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஹ்யா சின்வார் பொது இடங்களில் அதிகம் தோன்றாவிட்டாலும் ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராக இருந்து வந்துள்ளார். முகமது டேயிஃப்பின் நெருங்கிய நண்பரான இவர் அமைப்பின் ராணுவப் பிரிவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரது தலைமையில் ஹமாஸ் எப்படி செயல்படப் போகிறது என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. இஸ்ரேல் அரசும் சின்வாரின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிப்பை தொடங்கியுள்ளது.