ட்விட்டரில் இனி வீடியோ கால் பண்ணலாம்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய எலன் மஸ்க்

Aadmika
Aug 31, 2023,03:22 PM IST
நியூயார்க் : எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ள ட்விட்டர் இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பண்ணலாம் என அதன் நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல மாற்றங்களை அடிக்கடி கொண்டு வந்த வண்ணம் உள்ளார். இதுவரை அவர் கொண்டு வந்த மாற்றங்களில் பலவும் குழப்பம் ஏற்படுத்துவதாகவும், ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சி அடைய வைப்பதாகவும் இருந்தது. சமீபத்தில் ட்விட்டரின் லோகோ, பெயர் என அனைத்தையும் மாற்றினார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளது.



எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ள ட்விட்டரில் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இம்மாத துவக்கத்திலேயே எக்ஸ் தளத்தின் வடிவமைப்பாளர் ஆன்டிரியா கோன்வே, இந்த மாதம் சுவாரஸ்யமான முக்கிய அறிவிப்பு ஒன்று வரப் போகிறது என கூறி இருந்தார். இதனால் அது என்ன தகவல் என பலரும் ஆர்வமாக கேட்டு வந்தனர். 

இந்நிலையில் எலன் மஸ்க் தனது புதிய போஸ்ட்டில், வீடியோ கால் வசதி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதோடு எந்த ஆன்டிராய்டு மற்றும் டுஓஎஸ் போனில் இருந்தும் ட்விட்டர் மூலம் கால் செய்ய முடியும். எதிர்முனையில் இருப்பவரின் கம்ப்யூட்டருக்கு நீங்கள் உங்கள் போனில் இருந்து கால் செய்து பேச முடியும். இதற்கு போன் நம்பர் எதுவும் அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார். 

தற்போது ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சேவை கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வீடியோ கால் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது. இது அதிகமானவர்கள் ட்விட்டர் மூலம் மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த வசதியை அனைவராலும் பயன்படுத்த முடியுமா என்பது பற்றி எந்த தகவலையும் எலன் மஸ்க் குறிப்பிடவில்லை.