உலக கோப்பை கிரிக்கெட் 2023 : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Meenakshi
Oct 07, 2023,04:10 PM IST
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 8,13,18,23 மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. இதில் நாளை சென்னை  சேப்பாக்கத்தில்  உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இது தவிர சென்னையில் மேலும் சில போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த  போட்டிகள் நடைபெறும் நாட்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 



சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடை பெற இருப்பதால், போட்டிகள் நடைபெறும் அக்டோபர் 8,13,18,23,27 ஆகிய 5 நாட்களுக்கு சேப்பாக்க பகுதிகளில் மதியம்12 மணி முதல் இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து விபரம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 2000 க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. கண்ணகி சிலை பகுதியிலிருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்த பேருந்துகள் ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று, தங்கள் இலக்கை அடையலாம். பாரதிசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து இந்த சாலைக்கு வாகனங்கள் செல்லலாம். 

பாரதி சாலை -பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. பாரதி சாலையில் ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள், பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். இதேபோல வாலஜா சாலை, காமராஜா் சாலை பகுதியிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மெரீனா, காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதியிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்,போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி க்கு எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம் என்றும், அனுமதியுள்ள வாகனங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை  கிரிட்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்கள் ஏராளமானோர் இப்போட்டியை காண வர இருப்பதால் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மெட்ரோ ரயில்கள் கூடுதல் நேரம் இயக்கப்பட்டது.  ஐபிஎல் டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணமும் அறிவிக்கப்பட்டது. அதே போல் உலகக் கோப்பைக்கும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படவும், கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.