ஒவ்வொரு சொட்டும்.. ரொம்ப முக்கியம்... பார்த்துப் பயன்படுத்துங்க.. சேர்த்து வைங்க.. இது உயிர் அமுதம்

Su.tha Arivalagan
Mar 22, 2024,08:24 AM IST

- பொன் லட்சுமி


சென்னை: நீரின்றி அமையாது உலகு  என்பதற்கு இணங்க  இந்த உலகில் தண்ணீர் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது.. நீரின் தேவையை உணர்த்த வலியுறுத்தி ஐநா சபையால் கொண்டு வரப்பட்டது தான்  உலக தண்ணீர் தினம்.


ஆம்.. இன்று உலக தண்ணீர் தினம்.. ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் நாள் உலக  தண்ணீர்தினம் கொண்டாடப்படுகிறது.


உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது தண்ணீர்.. மனிதன்.. மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள்  வாழ்வதற்கு  முக்கியமான தேவை நீர் தான்.. தண்ணீர் என்பது விலைமதிப்பற்ற பொருளாகும்.. அதுதான் ஈஸியா கிடைக்குதே என்று பலரும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.


"மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 

காடும் உடையது அரண் " எனும் குறளில் நீருக்கே  முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்.. அந்த அளவுக்கு தண்ணீர் இன்றியமையாதது.


ஒரு மனிதனின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்காற்றுவது  நீர்  தான்.. ஆனால் அந்த நீரை நாம் எவ்வாறு சரியாக பயன்படுத்துகிறோம்?.. உண்மையில் தண்ணீரை சேர்த்து வைக்கத் தவறுகிறோம். மழைக் காலங்களில் பெய்யும் அதிக மழை நீரால் வெள்ளப் பெருக்குகளை நகரங்கள் சந்திக்கின்றன. அத்தனை மழை பெய்தும் கூட வறட்சியில் சிக்கித் தவிக்கவும் செய்கின்றன. இதற்குக் காரணம், நமது நீர் நிலைகளை சரியான முறையில் பாதுகாக்கத் தவறுவதே.




சரியான முறையில் நிலத்தடி நீராக சேமித்தாலே  தண்ணீர் பிரச்சனையை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.. தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது பழமையான சொல் வழக்கு.. ஆனால் இன்று எத்தனை பேர் அந்த தண்ணீரை  சரியான முறையில் பயன்படுத்துகிறோம்.


பண்டைய காலத்தில் நீரின் தேவை அறிந்த நம் முன்னோர்கள், ஊருனி, ஏரி, குளங்கள், கேணி, கண்மாய், அணை போன்றவற்றை கட்டி நீரை சேமித்து வைத்தனர்..  அதன் மூலம் விவசாயம் செழிப்பாக வளர்ந்தது. அது மட்டுமல்லாமல் ரோட்டோரங்களில் மரங்களை நட்டனர். ஏரிகள், குளங்களின் கரைகளில் பெருமளவில் மரங்கள் நட்டு வளர்த்தனர். இதனால் அதிகளவு மழை பெய்தது.. ஆனால் இன்று விலை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரிய கட்டிடங்கள் வணிக வளாகங்கள் என்று கட்டியதால் மழை பெய்யும் அளவு வெகுவாக குறைந்துள்ளது.


ஏரிகள், குளங்கள் இருந்த இடத்தில் இன்று பல அடுக்குமாடி கட்டிடங்கள் வந்து விட்டன. நீர் நிலைகள், நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், மழை பெய்யும் போது மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்களின் அன்றாட இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மழைக்காலத்தில்  பெய்யும் மழையை நாம் சரியாக சேமித்து வைத்து பயன்படுத்தினால்  தண்ணீர் பற்றாக்குறையை வெகுவாக குறைக்கலாம்.


இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் மாசு படிந்ததாகவே காணப்படுகிறது... தொழிற்சாலைகளில் இருந்து கலக்கும் கழிவுகள் ஆற்று நீரோடு சேர்ந்து நேரடியாக கடல் நீரில் கலக்கிறது.. இதன் மூலம் நீர் மாசுபட்டு  மனிதனின் ஆரோக்கியமும் கடல் வாழ் உயிரினங்களின் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது..




தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என நாம் அறிந்து கொண்டு நிலத்தடி நீரை உயர்த்த  நீர் நிலைகளை ஒழுங்காக தூர்வார வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டி கட்ட வேண்டும். வீட்டில் குளிக்க துவைக்க என பயன்படுத்தும் தண்ணீரை வீணாக்காமல் அந்த நீரை வீட்டிலேயே தொட்டி கட்டி மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்... அந்த கழிவு நீரையே  செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.. சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். பல வீடுகளில் குடிநீர் குழாயை சரிவர மூடாமல்  தண்ணீர் வீணாகிறது. அதனால் வீட்டு குழாய்களில் நீரை கசிய விடாமல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.. 


தண்ணீர்.. உயிர் அமுதம்.. பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டியது மிகமிக அவசியம்.. இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு பெங்களூரில் சமீபத்தில் தலைவிரித்தாடிய தண்ணீர்ப் பஞ்சமே மிகச் சிறந்த உதாரணம். ஒரு மனிதன் உணவின்றி கூட பல நாட்கள் உயிர் வாழலாம்... ஆனால் நீரின்றி ஒரு நாட்கள் கூட வாழ முடியாது  இதனை உணர்ந்து நாம் அனைவரும் தண்ணீரை காப்போம்.