சென்னையில் இன்று.. இதய வடிவத்தில் ஒளிரும்.. ட்ராபிக் சிக்னல் லைட்டுகள்.. எதுக்குன்னு தெரியுமா?

Manjula Devi
Aug 05, 2024,02:55 PM IST
சென்னை:  உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் டிராபிக் சிக்னல்களில் இதய வடிவத்தில் ஒளிரும் விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5ஆம் நாள் உலக டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு சாலை பாதுகாப்புகளை வலியுறுத்தவே இந்த ட்ராபிக் சிக்னல்கள் கொண்டுவரப்பட்டன.

கடந்த 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ நகரில்   யூக்ளிட் அவென்யூ மூலையில் முதல் மின்சார ட்ராபிக் சிக்னல் பொருத்தப்பட்டது. இதனை ஜேம்சால் என்பவர் அறிமுகப்படுத்தினார். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளுடன் ஒலி எழுப்பும் கருவியை கொண்டு வடிவமைத்திருந்தார். இதுதான் முதன் முதலில் பொருத்தப்பட்ட மின்சார ட்ராபிக் சிக்னல் என கூறப்படுகிறது. 



சிவப்பு நிறம் அபாயத்தை குறிக்கவும், மஞ்சள் நிறம் கிளம்பத் தயாராக இருப்பதை குறிக்கவும், பச்சை நிறம் செல்வதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து  நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ட்ராபிக் போலீஸ் மூலம் கையேந்தி டிராபிக் விளக்குகள் பயன்படுத்தப்பட்டது. பின் காலப்போக்கில் உலகம் முழுவதும் சாலை பாதுகாப்பிற்கு டிராபிக் சிக்னல்கள் மிகவும் இன்றியமையாதவையாக மாறி விட்டன. தற்போது ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் ட்ராபிக் சிக்னல் லைட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாடுகளிலும் சாலை விதிகள் என்பது மாறுபடும். அதற்கேற்ப வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் டிராபிக் சிக்னல்கள் உருவாக்கப்பட்டது. அதே போல் சட்ட விதிகளின் அடிப்படையில் சிக்னல் விளக்குகள் போக்குவரத்தை கட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் சிக்னல் ரூல்ஸ்களை மீறுபவர்களுக்கு போக்குவரத்து  விதிகளின்படி அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படும்.

இந்த நிலையில் இன்று உலக டிராபிக் சிக்னல் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் ட்ராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு டிராபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவத்தில் ஒளிர விடப்பட்டுள்ளன. அதாவது சிவப்பு விளக்கானது இதய வடிவில் ஒளிர்கிறது. இது வாகன ஓட்டிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இதனை மக்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.