அதிரிபுதிரியாக முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் அதிரடி

Meenakshi
Jan 17, 2024,06:37 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி அதிரிபுதிரியாக நடந்து முடிந்துள்ளது. பல்வேறு காளைகளும் முரண்டு பிடித்து, அதனால் கால தாமதம் ஆனதால் ஒரு மணி நேரம் போட்டி நேரம் நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக பிரமாதமாக நடந்து முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.


மதுரை கருப்பாயூரணி கார்த்திக் 18 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். இதே கார்த்திக்தான் கடந்த 2022ம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்திருந்தார். இவருக்கு அடுத்த இடத்தை பூவந்தி அபி சித்தர் 2வது இடம் பிடித்தார். இவர் 17 காளைகளை அடக்கினார். இவர் கடந்த 2023ம் ஆண்டு முதலிடம் பிடித்த சாதனையாளர் ஆவார். 12 காளைகளை அடக்கி திவாகர் 3வது இடத்தைப் பிடித்தார்.


ஜல்லிக்கட்டுனா அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் என்று கூறும் அளவிற்கு  உலகப்பெயர் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலகாலமாக தொடங்கியது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். போட்டியில் வணிகவரித்துறை அமைச்சர் ப.மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன




முதல் சுற்றிலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது. 1200 காளைகள் பங்கேற்ற நிலையில், நேரமின்மை காரணமாக 652 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. 800 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு சுற்றிலும் அதிகளவில்  காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்று தகுதி பெற்று வந்தனர்.


ஒவ்வொரு சுற்றிலும் பல காளைகள் முரண்டு பிடித்து மைதானத்திலேயே நின்று  கொண்டிருந்தன. பல காளைகள் மீண்டும் வாடி வாசலுக்குள்ளேயே ஓடி விட்டன. இப்படி ஏகப்பட்ட காளைகள் சேட்டை செய்ததால் ஒவ்வொரு சுற்றிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல காளைகள் சூப்பராக நின்று விளையாடின. நீண்ட நேரம் அவை மிரட்டலாக ஆடி வந்ததால் போட்டிகள் தொடக்கம் முதலே தாமதமாகவே இருந்து வந்தது. இதனால் குறிப்பிட்ட 5 மணிக்குள் அனைத்து சுற்றுக்களையும் முடிக்க முடியவில்லை. இதனால் போட்டி நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக்கப்பட்டது. 


கருப்பாயூரணி கார்த்தி 18 காளைகளை அடக்கி முதலிடம்




இறுதியாக 6 மணி வாக்கில் கடைசிச் சுற்று முடிவடைந்து போட்டி கோலாகலமாக முடிவடைந்தது.  அதிக காளைகளை அடக்கிய கார்த்திக்குக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அபி சித்தருக்கு பைக் வழங்கப்பட்டது. 


அதேபோல சிறந்த காளைக்கும் முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 லட்சம் மதிப்புள்ள காரும், 2வது பரிசாக ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள பைக்கும் வழங்கப்பட்டது. காளைக்கான முதல் பரிசு, திருச்சி மேலூர் குணாவுடைய மாடான கட்டப்பாவுக்குக் கிடைத்தது. 2வது பரிசு மதுரை காமராஜபுரம் செளந்தருடைய மாட்டுக்கு கிடைத்தது.


இதுதவிர தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, பித்தளை பாத்திரங்கள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களும் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டன. 


காயமடைந்தோர் எத்தனை பேர்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 78 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 28 பேர் வீரர்கள். மற்றவர்கள் காளை உரிமையாளர்கள், போலீஸார், பொதுமக்கள் ஆவர். ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு செந்திலும், ஆம்புலன்ஸ் ஊழியர் சுடலையும் காளை முட்டியதில் காயமடைந்தனர். 


காயமடைந்தோர் உடனடியாக மருத்துவ உதவிக்கு உட்படுத்தப்பட்டனர். பெரிய அளவில் யாருக்கும் இந்த முறை காயம் ஏற்படவில்லை என்பது முக்கியமானது.


நடிகர்கள் அருண் விஜய், சூரி வருகை




ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர்கள் அருண் விஜய், சூரி ஆகியோர் வந்திருந்தனர். அருண் விஜய் கூறுகையில், ஜல்லிக்கட்டு பே்டாடியை முதல் முறையாக நேரில் பார்க்க வந்துள்ளேன். போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. உயிரை பணயம் வைத்து வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்று  தெரிவித்தார்.


நடிகர் சூரி, மதுரையில் நடக்கும் எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிக்கும் தவறாமல் வந்து விடுவார். அவனியாபுரம் வந்தார், நேற்று பாலமேட்டுக்கும் வந்திருந்தார். இன்று அலங்காநல்லூருக்கும் வருகை தந்துள்ளார். அதேபோல நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தும் வந்திருந்தார்.


பாதுகாப்பு ஏற்பாடுகள்


போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் அலஹ்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.