இந்தியா அதிரடி.. பாகிஸ்தானை பந்தாடி சூப்பர் வெற்றி.. உலகக் கோப்பையில் இது 8வது சக்ஸஸ்!

Su.tha Arivalagan
Oct 14, 2023,05:46 PM IST
அகமதாபாத்:  உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் பெரிய அளவில்  ரன் குவிக்க முடியவில்லை. முகம்மது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்டிக் பான்ட்யா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில், ஷ்ர்துள் தாக்கூருக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.

இதையடுத்து 192 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். அவரது அதிரடி பேட்டிங்கைப் பார்த்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறிப் போயினர். 30.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்தியா 192 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.





நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக பெறும் 3வது வெற்றி இது. மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை ஒருமுறை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. அந்த வரலாற்றையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 8 முறை மோதி எட்டு முறையும் இந்தியாவே வென்றுள்ளது.

இந்தியத் தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 86 ரன்களைக் குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களை விளாசினார். சுப்மன் கில் 16, விராட் கோலி, 16, கே.எல்.ராகுல் 19 ரன்களை எடுத்தனர். 

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.


இந்திய அணி தொடக்கத்திலிருந்தே சிறப்பாக பந்து வீசியது. இருப்பினும் அதைச் சமாளித்து பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முயன்றனர். கேப்டன் பாபர் ஆசம் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அதேபோல விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வானும் சிறப்பாக ஆடி 49 ரன்கள் எடுத்தார். மற்றவர்களில் இமாம் உல் ஹக் 36 ரன்களையும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களையும் எடுத்தனர். முன்னணி பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வானுக்குப் பிறகு வந்த அனைவருமே சிங்கிள் டிஜிட்டில் வீழ்ந்தனர். 

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து  ஆட முடியாமல் இவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கூட எடுக்க முடியாமல், 42.5 ஓவர்களில் 191 ரன்களில் ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியின் கடைசி 7 வீரர்கள் மொத்தமாக 32 ரன்களே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஹசன் அலி சற்று சமாளித்து ஆட முயன்றார். ஆனால் 12 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.