கை கொடுக்கும் இயற்கை மருத்துவம்.. அதன் மகத்துவம் மற்றும் சாராம்சங்கள்!
- கவிஞாயிறு இரா.கலைச்செல்வி
உணவே மருந்து ...!!! மருந்தே உணவு ....!!! இது பொன்மொழி..!!!
எம்.பி.பி.எஸ் மட்டுமே மருத்துவப் படிப்பு அல்ல. அது போன்றே, இந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவமும், ஐந்தரை வருடங்கள் படிக்கும் , இந்திய மருத்துவ முறையாகும்.
இந்த மருத்துவ முறையின் முக்கிய தத்துவம் , உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்துதலே சிகிச்சை என்று அந்த மருத்துவம் சொல்கிறது.
கழிவுகளின் தேக்கமே நோய்..!! கழிவு நீக்கமே அதற்கான தீர்வு..!! இதுவே இயற்கை மருத்துவத்தின் அடிப்படை கோட்பாடு.
சுரைக்காய், வெண்பூசணி, பாகற்காய் போன்ற காய்களின் சாறுகளும், கருவேப்பில்லை, புதினா, அருகம்புல் ஆகியவற்றின் சாறுக்களும், ஆரஞ்சு, திராட்சை , சப்போட்டா ,தர்பூசணி போன்ற பழங்களும் ரத்தத்தை தூய்மைப்படுத்தி, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
காரட், பீட்ரூட், பரங்கிக்காய் போன்ற பச்சை காய்கறிகள், முளைக்கட்டிய, பாசிப்பயறு , வெந்தயம் போன்றவை, ஒருவேளை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வலுவும், மனதிற்கு வளமும், தேவையான எல்லா வைட்டமின்களும், கிடைக்கின்றன.
பட்டை தீட்டாத அரிசி, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்கள், உடலுக்கு வலிமையை தரக்கூடிய உணவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
வெள்ளைச் சீனி, மைதா, எண்ணெயில் பொரிக்கும் உணவுகள், வேதிப் பொருள்கள் கலந்த, பதப்படுத்தப்பட்ட ரெடிமேடு உணவுகள், ஆகியவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பது மருத்துவர்களின் கருத்து.
வாரம் ஒரு முறையேனும், உண்ணா நோன்பு இருப்பதால், அதாவது விரதம் இருந்தால், உடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு தந்து, உடலின் கழிவு நீக்கச் செயல் நன்கு செயல்பட உதவும்.
அதேசமயம், முழுமைாயக உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்து, உண்ணா நோன்பின்போது, பழச்சாறு, காய்கறி சாறுகளை உண்டு எளிதாக கடைப்பிடிக்கலாம்.
வாரம் ஒரு முறையேனும், எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடலின் தசைகள், நரம்புகள், மூட்டுகளை பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடல் வலிகளை குறைத்து புத்துணர்வை ஏற்படுத்தும்.
நன்கு பசித்த பின், அமைதியாக தரையில் அமர்ந்து, சாப்பிடுவது மிகவும் நல்லது.
தினம் முடிந்தவரை, யோகா மற்றும், மூச்சுப் பயிற்சிகளை, அரை மணி நேரமாவது செய்வதும், திறந்த வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், உடலின் உள் உறுப்புக்களை நன்கு இயக்கி, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.
மாதம் ஒருமுறையேனும், குடலை தண்ணீரால் எனிமா எடுத்து, சுத்தம் செய்வது, முக்கியமான கழிவு நீக்க இயற்கை மருத்துவ சிகிச்சை முறையாகும்.
சூரியக் குளியல், வாழையிலை குளியல், மண் குளியல் போன்றவையும், இயற்கை மருத்துவத்தின் எளிய சிகிச்சை முறைகளாகும். ஆறு மாதத்திற்கு ஒருமுறையேனும் இவற்றை எடுத்துக் கொண்டால் நலம் பயக்கும்.
மேலே கூறியவற்றை, மேற்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கழிவுகள் நீக்கப் பெற்று, ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடல் வலுப்பெற்று, மருத்துவமனைக்கு செல்லாமல்,நோய்கள் இன்றி இனிது வாழலாம்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்
இன்பமாய் வாழலாம்.
இயற்கையின் ஆற்றல் அளப்பரியது.
இயற்கை வாழ்வே இனிய வாழ்வு.
குறிப்பு: மருத்துவக் குறிப்புகளை கையாளும்போது உரிய மருத்துவ நிபுணர் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்வது நலம்.