அம்மாக்களே, அக்காக்களே, தங்கச்சிகளே.. ப்ளீஸ்.. உங்களையும் கவனிங்க கொஞ்சம்!

Su.tha Arivalagan
Aug 18, 2023,01:49 PM IST
- மீனா

சென்னை: "பெண்கள் நம் நாட்டின் கண்கள்" என்று சொல்வார்கள். ஆனால் நாட்டின் கண்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டின் தூண்களும் அவர்கள் தான். இதை பெண்களே உணராமல் இருப்பது தான் மிகவும் வேதனையான  விஷயம்.

ஆனால் எல்லா பெண்களையும் சொல்லிவிட முடியாது. பெண்கள் எல்லாம் முன்ன மாதிரி கிடையாது. இப்போது அவங்களே  அவர்களை செல்ஃப் கேர் செய்து நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இன்னமும் கூட தனக்கான நேரத்தையும் தனக்கு பிடித்ததையும் தன்னை பற்றி சிந்தனையும் இல்லாமல் எத்தனையோ பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குதான் இந்த கட்டுரை. 



சூரியன் வருவதற்கு முன்பு அல்லது வந்த பிறகு முதலில் அவர்கள் போகுமிடம் கிச்சனாகத்தான் இருக்கும். இப்படி சூரியன் வரும்போது தன் வேலையை தொடங்கும் அவர்கள் சூரியன் மறைந்தாலும் தன்னுடைய வேலைகளை இன்னும் செய்து கொண்டே இருக்கதான் செய்கிறார்கள். கடிகாரம் போல் மற்றவர்களுக்காக எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். 

பொதுவாக பெண்கள் தன் கணவனுக்கு இது பிடிக்கும், தன் குழந்தைகளுக்கு இது பிடிக்கும், என்று பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் தனக்கு என்ன பிடிக்கும் என்று அவர்களுக்கே மறந்து போயிருக்கும். இதைப் பத்தி கேட்டா பாதிப் பெண்களுக்கு டக்குன்னு பதில் வராது.. அந்த அளவுக்கு குடும்பத்துக்காக என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள்.

செல்ஃப் கேர்

அப்ப நம்ம குடும்பத்துல உள்ளவங்களை நாம கேர்  பண்ணாம வேற யார் கேர் பண்ணுவா என்று நீங்கள் நினைக்கிறது எங்களுக்கு தெரியுது. ஆனால் அது அப்படியல்ல, அவங்களையும் கேர் பண்ணிக்கிட்டு உங்களையும் நீங்க கேர்  பண்ணுங்க என்று தான் சொல்கிறோம். சுவர் இருந்தால்தான்  சித்திரம் வரைய முடியும். அப்படி இருக்கும்போது  நம்மை நாமே முதலில் கேர் பண்ணி கொண்டால் தான் நம்மால் மற்றவர்களையும் பார்த்துக் கொள்ள முடியும். 

உங்களுக்கான செல்ஃப் கேர் ரொட்டீனை காலையிலிருந்து தொடங்குங்கள். செல்ப் கேர் என்பது மேக்கப் பண்ணுவது, சுயநலமாக யோசிப்பது என்று அர்த்தம் கிடையாது. ஒரு முறையான செல்ஃப்  கேர் ரொட்டீனை நாம் பின்பற்றும்போது நம் வீட்டையும் பார்த்துக்கொண்டு , நமது  குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு நம்மையும் டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். நேரம் இருந்தால் செய்வோம் என்ற எண்ணத்தை தூக்கி  எறிந்து உங்களோடு தான் உங்கள் நேரமும் இருக்கிறது, என்பதை உணர்ந்து அதை உங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி செய்யும்போது  உங்கள் தன்னம்பிக்கை அளவை அது மேலும் அதிகப்படுத்தும் . 

நல்ல சாப்பாடு முக்கியம்

காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் அடுத்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும் என்று நினைப்போம். ஆனால் வெறும் வயிற்றில் இவற்றை குடிப்பதற்கு பதில் நாம் சத்தானதாக எடுத்துக் கொள்ளலாம் .அது மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். உதாரணமாக, இரவே 6 பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் அதை தோல் நீக்கி நீங்கள் சாப்பிடலாம். இதுல விட்டமின், புரோட்டின், பைபர் என நம் உடலுக்கு  தேவையான சத்துக்கள் இருக்கு. பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிது உப்பு சேர்த்து இதையும் டீ, காபிக்கு பதிலாக குடிக்கலாம். இதுவும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.  

குழந்தைகளுக்கு பழங்கள், நட்ஸ் என்று சத்தானதை கொடுக்கும் போது அதை நீங்களும் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடலாகவே இருக்கிறீர்கள்   ஹெல்த்தை பார்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று அவர்களும் உணர்வார்கள். இப்படி செய்யாமல் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டால் போதும் நாம் மிச்சம் ஏதாவது இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் தியாகம் செய்வதாக நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உங்கள் மனதையும் பாதிக்கிறது.

நான் இவர்களுக்காக இவ்வளவு தியாகம் செய்கிறேன் .ஆனால்  என்னைப் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை என்று நீங்கள் நினைக்கும் போது உங்களுடைய மன உளைச்சலை அதிகப்படுத்தும். இது இல்லாத வியாதிகளையும் விருந்து வைத்து அழைப்பதற்கு சமமானது.  சமையல் செய்த உடனே சூடாகவே நீங்கள் நிம்மதியாக முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு குழந்தைகளுக்கும் பரிமாறலாம். இப்படி நீங்கள் செய்யும் போது குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தானதை நாமும் சாப்பிடுகிறோம். அதனால் நாமும் நம்  குடும்பத்தினரும்  ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று உங்களுக்கும் ஒரு மன நிறைவுகிட���க்கும்.இதனால் யாரும் உங்களை தவறாக நினைக்க போவது கிடையாது. 

உங்களுக்கான சுயமரியாதையை நீங்களே முதலில் கொடுத்தால் தான் மற்றவர்களும் அதை கொடுக்க முன் வருவார்கள். அதற்கு நீங்களே ஒரு தடையாக இருக்க வேண்டாம். மேலும் நான் வீட்டில் தானே இருக்கிறேன் நைட்டியோடு இருக்கலாம் என்று நினைக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலும் நாமும் நீட்டாக டிரஸ் போட்டுக் கொண்டு இருக்கலாம். வெளியிலிருந்து  யாராவது வந்தாலும் நாம் இப்படி உடை  போட்டு இருக்கோமே என்று  நினைக்க அவசியம் இருக்காது. இது மேலும் அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதையை அதிகப்படுத்தும்.  

நீட்டா டிரஸ் பண்ணுங்க

வீட்டில் இருக்கும்போது நமக்கு வசதியாக இருக்கும் விதமாக எத்தனையோ டிரஸ்கள் வந்துவிட்டன. அதை நாம் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நம் வீட்டில் ஏதாவது விசேஷம் அல்லது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள்  என்றாலும் பெண்களாகிய நமக்கு நிறைய வேலைகள் இருக்கும். அதனால் அந்நாள் முழுவதும் கிச்சன்லையே கூட முடிந்து விடும். ஆனால் நம் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் அன்றைய தினத்தில் டிவியில் வரும் நல்ல நல்ல படம் மற்றும் ப்ரோக்ராம் பார்த்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.  இப்படி நாமும் செய்ய முடியவில்லையே  என்று ஏங்கி இருப்போம். ஆனால் இனியாவது இந்த தவறை செய்யாமல் ஒரு பண்டிகை வருகிறது என்றால் அதற்கு முன்னரே என்ன செய்யப் போகிறோம் ,எப்படி செய்யப் போகிறோம், என்று ஒரு பிளான் செய்து அதில் வீட்டில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு அதை சீக்கிரத்தில் செய்து முடித்து நாமும் அந்த பண்டிகையை நம் குடும்பத்தில் உள்ளவர்களோடு சேர்ந்து கொண்டாடி மகிழலாம்.



அதேபோல பண்டிகைகளின்போது எல்லாவற்றையும் உட்கார்ந்து நாமே செய்து கொண்டிருக்காமல், வீட்டிலேயே செய்து விற்பதை  வாங்கிக் கூட உண்டு மகிழலாம். அதனால் சிறிது செலவாகும். ஆனால் நமக்கு அருமையான நேரம் மிச்சமாகுதே.. அதை குடும்பத்தோடு செலவிட பயன்படுத்திக் கொள்ளலாமே.. எனவே அப்படி யோசிச்சுப் பாருங்க.
உடற்பயிற்சி முக்கியம்

இதுபோக உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க ஒரு 1/2 மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது 
நடைபயிற்சி தொடர்ந்து செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு வீட்டில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்ததிற்கு சமம் என்று சொல்வார்கள். அதேபோல் அந்த வீட்டு வீட்டு பெண் ஆரோக்கியமாக இருந்தால் அந்த முழு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம். 

நமக்கு என்ன தேவை என்று நம்  குடும்பத்தினருக்கு நாம் தான் புரிய வைக்க வேண்டும். நாமே இதில் அக்கறை இல்லாமல் இருந்தால் நம்மை பற்றி அக்கறை அவர்களுக்கு எப்படி வரும் . இப்படி தான் நமக்கான நேரத்தை நாம் செலவு செய்து நாமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். என்ன அக்காக்களே, தங்கச்சிகளே.. புரிஞ்சுருச்சா.. பாலோ பண்ணுவோமா இனி!