மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு மசோதா : லோக்சபாவில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

Aadmika
Sep 20, 2023,08:13 PM IST

டில்லி : லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவில் இன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 


பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதை சட்டம் ஆக்குவதற்கான மசோதா கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனாலும் இதுவரை சட்டமாக்கப்படாமல் இருந்தது. 




பல காலமாக நிலுவையில் இருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவை தற்போது தூசி தட்டி எடுத்துள்ளது மத்திய அரசு. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பார்லிமென்ட் புதிய கட்டத்தில் நடத்தப்பட உள்ள பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பல காலமாக நிலுவையில் இருக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 


புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கி நடந்து வருகிறது. இதில் முதல் மசோதாவாக மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது இன்று (செப்டம்பர் 20) விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தவிர அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல தமிழக கட்சிகளும் இந்த மசோதாவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் இந்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்திற்கு பிறகு, இந்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக இரண்டு பேரும் ஓட்டளித்துள்ளனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த மசோதா லோக்சபாவில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் ராஜ்யசபாவிலும் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 


2029 தேர்தலில் அமலாகும்:  ராஜ்யசபாவிலும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் உடனடியாக இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டமாக நிறைவேற்றப்படும். தற்போது இது சட்டமாக்கப்பட்டாலும் கூட வருகிற லோக்சபா தேர்தல் அல்லது எதிர் வரும் சட்டசபைத் தேர்தல்களில் இந்த இட ஒதுக்கீடு அமலாகும் வாய்ப்பில்லை.


காரணம் தொகுதி மறு சீரமைப்பு நடந்த பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என்றுமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஒதுக்கீடு அமலுக்கு வர வாய்ப்பில்லை.