மகளிர் மசோதா: ஓ.பி.சி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும்.. ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Sep 22, 2023,03:50 PM IST

டெல்லி: மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் எனவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் கூறியதாவது:




மகளிர்க்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறது பாஜக அரசு. முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்


மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இன்றிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும். இதில் பெரிய சதி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறு வரையறை முடிந்த பின்னரே மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது .


நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்கள்  ஓபிசி சமுதாயத்தினர். ஆனால், மத்திய அரசில் உள்ள 90 துறை செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். ஓபிசி பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் நிதியில் 5 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கின்றனர்.  

மத்திய அரசிடம் ஓபிசி பிரிவினர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்கள் இல்லை. நாட்டின் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.  அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறினார் ராகுல் காந்தி.