Water Intoxication.. 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்!

Aadmika
Aug 06, 2023,11:31 AM IST

நியூயார்க் : வெயிலின் வெப்பம் தாங்காமல் 20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த 35 வயதாகும் அமெரிக்க பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பலவிதமான நோய்களை தடுக்கும் என்று தான் அனைத்து டாக்டர்களும் அறிவுரை வழங்க கேட்டிருக்கிறோம். நாமும் பிறருக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். 




ஆனால் எல்லாமே அளவுதான்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த வகையில் குறுகிய நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்ததால் ஒரு பெண்ணின் உயிரே போயுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.


நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அஷ்லே என்ற 35 வயதாகும் பெண் தனது கணவர், இரண்டு பெண் குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்க இண்டியானாவில் உள்ள லேக் ஃபிரீமென் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அதிக வெப்பம் காரணமாக இவரது உடலில் நீர் சத்து குறைந்துள்ளது. இதனால் அதிக தண்ணீர் குடித்துள்ளார். தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு தலைவலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது கழிவறைக்கு சென்ற அவர் அங்கு மயக்கமடைந்துள்ளார்.




சுயநினைவு இல்லாமல் இருந்த ஆஷ்லே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அவர் 20 நிமிடங்களில் 4 பாட்டில் தண்ணீர் குடித்ததாக சிலர் சொல்வதாக ஆஷ்லேவின் சகோதரர் டெவின் மில்லர் தெரிவித்துள்ளார். சராசரியாக 16 அவுன்ஸ் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இவர் 20 நிமிடங்களில் 64 அவுன்ஸ் குடித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை இவர் 20 நிமிடங்களில் குடித்ததாக சொல்லப்படுகிறது.


இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இதை water intoxication என்று சொல்வார்கள். அதாவது குறுகிய காலத்தில் ஒருவர் அதிகப்படியான தண்ணீரை குடித்தால் கிட்னியில் அதிகமான தண்ணீர் சேகரித்து வைக்கப்படும். இது உடல்நிலையை பாதிக்கும். இதனால் தண்ணீர் விஷதன்மையாக மாறி விடும். ரத்தத்தில் உள்ள தண்ணீரில் இந்த விஷத்தன்மை அதிகம் ஆகும் போது அது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். இது எலக்ட்ரோலேட்களை நீர்த்து போக செய்யும். குறிப்பாக ரத்தத்தில் உள்ள சோடியத்தை நீர்த்து போக செய்யும்.




ஒரு லிட்டர் ரத்தத்தில் சோடியத்தின் அளவு 135 மில்லிமோல்சிற்கு கீழ் சென்றால் அதை hyponatremia என்கிறோம். உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள செல்களில் இருக்கும் நீர் தன்மையை சமமாக வைத்திருப்பது சோடியம் தான். அதிகமான தண்ணீர் குடிக்கும் போது சோடியம் அளவு குறைந்து நீர்சத்துக்கள் செல்களுக்கு சமமாக பயணிப்பது தடைப்பட்டு செல்வகளில் வீக்கம் ஏற்படும். இது மூளையில் உள்ள செல்களில் ஏற்படும் போது மிகவும் ஆபத்தானது. உயிரை கூட குடிக்கலாம் என்கின்றனர்.


அதிகப்படியான தண்ணீர் குறுகிய காலத்தில் குடிப்பதால் மண்டை ஓட்டில் அழுத்தம் ஏற்படும். அதிகப்படியான தலைவலி, குமட்டல், வாந்தி, தூக்கமாக வருதல், தசைகள் பலவீனமடைதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், பார்வை மங்களாக அல்லது இரண்டாக தெரிதல், குழப்பம், மூச்சுவிட முடியாமல் போதல் ஆகியன இதன் அறிகுறிகள் என ஹார்வர்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


இது போன்ற தண்ணீர் விஷமாவது மிக அரிதாக ஏற்படக் கூடியதாகும். பொதுவாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், கடுமையான பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் அல்லது பல்வேறு மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இது ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.