மாணவர்களை அடித்தும், கண்டக்டரை நாய் என்றும் திட்டி பரபரப்பை ஏற்படுத்திய.. ரஞ்சனா நாச்சியார் கைது!

Su.tha Arivalagan
Nov 04, 2023,07:54 PM IST

சென்னை: சென்னையில் புட்போர்ட் பயணம் செய்த மாணவர்களை வெளியே இழுத்து தலை, கழுத்து, முகத்தில் சரமாரியாக அடித்தும், மாணவர்களையம், கண்டக்டரையும் "நாய், அறிவு கெட்ட நாய்" என்று திட்டியும் பேசிய பாஜகவைச் சேர்ந்த ரஞ்சனா நாச்சியார்  தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


புட் போர்ட் பயணம் ஆபத்தானதுதான். அதற்காக பஸ்ஸை நிறுத்தி, மாணவர்களைக் கண்டித்ததும், இறக்கி விட்டதும் கூட சரியானதுதான். இருப்பினும், மாணவர்களை கை நீட்டி அடித்தது நியாயமற்ற செயல், மேலும் பஸ் கண்டக்டரை அநாகரீகமாக, ஒருமையில் பேசித் திட்டியதும் சற்று எல்லை மீறிய செயல் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் மத்தியிலும் இந்த செயல் எல்லை மீறியதாக கருத்து   தெரிவிக்கப்பட்டது.


தன்னை போலீஸ் என்று பொய்யாக கூறிக் கொண்டு, சிறார்களை தலையிலும், முகத்திலும் சரமாரியாக அடித்தும், கண்டக்டர், டிரைவரை நாய் என்று திட்டியும் அநாகரீகமாக நடந்து கொண்ட ரஞ்சனா மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





முன்னதாக இதுதொடர்பான ஒரு வீடியோ பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது. சென்னை குன்றத்தூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


பஸ்ஸின் பின்  பக்க படிக்கட்டில் ஏகப்பட்ட மாணவர்கள் புட்போர்டில் நின்றபடி பயணிக்கின்றனர். இதை ஒரு பெண் வழிமறித்து பஸ்ஸை நிறுத்துகிறார். டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பஸ் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து படிக்கட்டுகளுக்குப் போய் மாணவர்களை கீழே இறங்குமாறு சத்தம் போடுகிறார். பின் படிக்கட்டில் நின்றிருக்கும் மாணவர்களை கீழே இழுத்துத் தள்ளி விடுகிறார். சரமாரியாக அடிக்கிறார். தலை, கழுத்து, முதுகு என் அவர் அடிப்பதில் கோபம் தெரிகிறது.  மாணவர்களை நாய் அறிவு கெட்ட நாய் என்றும் திட்டுகிறார். மாணவர்களைத் திட்டியபடியே அடிக்கும் அவர் பிறகு கண்டக்டரைப் பார்த்து சரமாரியாக திட்டுகிறார். 




ஏய் உனக்கு அறிவில்லை.. அறிவு கெட்ட நாய்.. புள்ள குட்டி இல்லை உனக்கு.. என்னடா கவர்ன்மென்ட் பஸ் ஓட்டுறே என்று சரமாரியாக அவரை திட்டுகிறார். நடு ரோட்டில் வைத்து அந்தப் பெண்மணி நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னை போலீஸ் என்றும் இவர் கூறிக் கொண்டதால் யாரும் இவரை எதிர்த்துப் பேசவில்லை.


சிறார்களை பொது இடத்தில் அடித்தது தவறு


புட்போர்ட் பயணம் மிகவும் அபாயகரமானது, ஆபத்தானது. அதைத் தட்டிக் கேட்டது சரியான செயலே.. பஸ்ஸை நிறுத்தி மாணவர்களை இறக்கி விட்டும் சரியான செயலே.. ஆனால் அடித்து, நாய் என்று திட்டியது, அரசு ஊழியரைப் பார்த்து அநாகரீகமாக திட்டியது நியாயமான செயல் இல்லை என்று பலரும் கண்டித்தனர். குறிப்பாக சிறார்களை தலையிலும், முகத்திலும் அடித்துள்ளார் இப்பெண். இது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.


எப்படி இவர் சிறார்களை அடிக்கலாம்.. சிறார்களுக்குப் பாதுகாப்பாக பல சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லா சட்டத்தையும் மீறும் வகையில், ரவுடித்தனமாக செயல்பட்ட இந்தப் பெண்மணி மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்த நிலையில்தான் தற்போது ரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.


யார் இவர்?




நல்லவேளை, அந்தப் பெண் மப்டியில் வந்த போலீஸ் அதிகாரியாக இருக்குமோ என்று நினைத்து மாணவர்கள் அடி வாங்கியபடி இறங்கிச் சென்றுள்ளனர். ஒருவேளை அவர் போலீஸ் அதிகாரி இல்லை என்று தெரிந்திருந்தால் நிச்சயம் பதிலுக்குத் தாக்கியிருக்கக் கூடும். காரணம், அவர்களில் பெரும்பாலானவர்கள் யூனிபார்மில் இல்லை. சிலர் கல்லூரி மாணவர்களைப் போல தெரிந்தனர். பதிலுக்கு அவர்களும் அந்தப்  பெண்மணியைத் தாக்கியிருந்தால் ரசாபாசமாகியிருக்கக் கூடும்.


இந்தப் பெண்ணின் பெயர் ரஞ்சனா நாச்சியார். இவர் சினிமாவில் துணை வேடங்களில் நடித்துள்ளார். அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த வாரிசும் ஆவார். பாஜகவில் இவர் செயல்பட்டு வருகிறார்.




சில காலத்துக்கு முன்பு தனது மாமனார் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கி நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.


தவறு செய்பவர்களை கண்டிக்க அனைவருக்குமே உரிமை உண்டு. ஆனால் தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.  அதை செய்வதற்குத்தான் கோர்ட், காவல்துறை உள்ளது. அங்கு போய் உரிய முறையில் முறையிட்டிருக்கலாமே தவிர, தானே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ரஞ்சனா நாச்சியார் போன்ற பொறுப்பானவர்கள் செயல்பட்டிருப்பது பலரின் கண்டனத்தை வாரிக் குவித்துள்ளது. இவரால் தேவையில்லாமல் பாஜகவுக்குத்தான் இப்போது கெட்ட பெயராகியுள்ளது.