நிவியா கிரீம் டப்பாவைத் திறந்து பார்த்தா... என்னா ஒரு புத்திசாலித்தனமான திருட்டு!
கொச்சி: விமானங்களில் பயணிக்கும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் டெக்னிக்குகள் எல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். கற்பனையே செய்து பார்க்க முடியாத வகையில் எல்லாம் கடத்திக் கொண்டு வருவார்கள்.
வெளிநாடுகளிலிருந்து பெரும்பாலும் நகைதான் அதிகம் கடத்தப்பட்டு வரும். விலை உயர்ந்த நகைகளை கடத்தி வருவோர்தான் அதிகம். ஒரு ஆள் இவ்வளவு நகைதான் விமானத்தில் எடுத்து வர முடியும் என்று கணக்கு உள்ளது. சில கடத்தல்காரர்கள் அந்த அளவிலான நகையை பகிரங்கமாக கொண்டு வருவார்கள். அதற்கு மேல் உள்ள நகையை டிசைன் டிசைனாக கடத்திக் கொண்டு வருவார்கள்.
மலக்குழாயில் வைத்துக் கொண்டு வருவது, ஷூவுக்குள் மறைத்துக் கொண்டு வருவது என்று விதம் விதமாக கொண்டு வருவார்கள். இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில், ஒரு பெண் பயணி இன்னும் வித்தியாசமான முறையில் நகையைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்.
ரோம் நகரிலிருந்து இவர் கொச்சிக்கு விமானம் மூலம் வந்துள்ளார். வழக்கமான பரிசோதனையின்போது இவரிடம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இவர் வைத்திருந்த மேக்கப் கிட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவை பரிசோதிக்கப்பட்டன. அப்போது அந்தப் பெண் வைத்திருந்த நிவியா கிரீம் டப்பாவைப் பரிசோதித்தனர். அந்தப் பரிசோதனையின்போது கிரீமுக்குள் ஏதோ இருப்பது போல இருந்தது. உடனே அதை எடுத்துப் பார்த்தபோது அது தங்க வளையம். 4 வளையங்கள் ஒரு டப்பாவில் இருந்தது.
இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தங்க வளையங்கள் 640 கிராம் எடையில் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 36.07 லட்சமாகும். அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.