விஜய் கேட்கும்போது..விஜயகாந்த் இருந்திருந்தால்..நோ சொல்லி இருக்க மாட்டார்..பிரேமலதா விஜயகாந்த் தகவல்

Manjula Devi
Apr 17, 2024,12:13 PM IST

சென்னை: ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்த்தை கோட் படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். நிச்சயம், விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவிக்க மாட்டார். விஜய் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இதுகுறித்து முடிவெடுப்போம் என்று தேமுதிக தலைவரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


ஏஜிஎஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோட். இப்படத்திற்கு யுவன் ராஜா இசையமைக்கிறார். இதில் நடிகர் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கெட்டப்பில் நடித்து அசத்தி உள்ளாராம். இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா நடித்துள்ளனர். இவருடன்  பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, ஜெயராம் மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.




கோட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிட்டதிலிருந்து மக்களிடம் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் விசில் போடு என்ற முதல் பாடல் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.


இந்த நிலையில் கோட் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்ப மூலம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


விஜய் நடிக்கும் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஐந்து ஆறு முறை வந்து வந்து சந்தித்தார். எனது மகனைத்தான் பார்த்துப் பேசியுள்ளார். அப்போது வெங்கட் பிரபு, படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்த் உருவத்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என கேட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு விஜய்யும் என்னை வந்து சந்திப்பதாகவும் அவர் கூறியிருந்தார். விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்திலிருந்து நான் யோசிக்க வேண்டும். 


செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜய்க்கு நல்ல அறிமுகம் கொடுத்ததே கேப்டன் தான் என்பது உலகுக்கே தெரியும். விஜயகாந்த் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்..? இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும்  மிகப்பெரிய பாசம் உண்டு. அதனால் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை கோட் படத்தில் கொண்டுவருவது குறித்து அவர்கள் கேட்கும்போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுத்து சொல்லி இருக்க மாட்டார். விஜய் என்னை வந்து சந்திக்கும் போது நான் நல்ல முடிவாக கூறுகிறேன் என கூறியுள்ளார்.