திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுப்பாரா விஜய்?.. தமிழக வெற்றி கழகம் குறிவைப்பது யாருடைய வாக்கை?

Aadmika
Feb 04, 2024,07:31 AM IST

சென்னை : கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தீவிர விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசியல் கட்சியை துவக்கி, அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 


சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், அந்த செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஒன்றும் புதியது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், குஷ்பு, சரத்குமார், கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின் என பெரிய பட்டியலே உள்ளது. அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஜய். 




2021 ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சிறிய இயக்கமாக தனது அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் விஜய். அதன் பிறகு அவரது இயக்கம் சார்பில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்தனர். 2022 ல் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய்யின் பிரச்சாரம் இல்லாமலேயே 10க்கும் இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் கைப்பற்றினர்.


தன்னுடைய படங்களில் அரசியல் வசனங்கள், பாடல்கள் மூலம் தனது அரசியல் என்ட்ரியை உறுதி செய்த விஜய், தற்போது புஸி ஆனந்த்தை பொது செயலாளராக நியமித்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். விரைவில் தீவிர அரசியலில் இறங்க போவதாகவும் அறிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் அவரது அரசியல் என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர். 


யாருடைய கோட்டையில் ஓட்டை விழும்?




லோக்சபா தேர்தல் சமயத்தில் விஜய் துவக்கி உள்ள புதிய அரசியல் கட்சி, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. விஜய்யின் கட்சி, அதிமுக-திமுக ஆகிய இரண்டில் எந்த கட்சியின் ஓட்டை குறிவைக்கிறது என்ற கேள்வி தான் பலரிடமும் பெரிய விவாதமாக உள்ளது.


விஜய் தன்னுடைய கட்சி பெயரில் திராவிடம் என்ற பெயரை சேர்க்கவில்லை. இதனால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இளைஞர்களின் ஓட்டுக்களையும், அதிமுக-திமுக.,வை விரும்பாதவர்களின் ஓட்டுக்களையே குறிவைப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக-திமுக.,விற்கு என மொத்தமாக 71 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. 1967 ல் இருந்து இந்த இரு கட்சிகளும் தான் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதனால் திராவிட கட்சிகளின் ஆட்சியை மட்டுமே பார்த்து வரும் மக்களுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


தமிழக அரசியலை பொறுத்தவரை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 6.58 சதவீதம், டாக்டர் ராமதாசின் பாமக.,விற்கு 3.8 சதவீதம், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2.62 சதவீதம், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 2.35 சதவீதமும், பாஜக.,விற்கு 2.62 சதவீதம் ஓட்டு வங்கியும் உள்ளது. இதனால் வழக்கமான அரசியல் கட்சிகளின் அரசியல் இல்லாத இளம் தலைமுறையினரின் ஓட்டுக்களை மட்டுமே குறிவைத்து விஜய் கட்சியை துவக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.


விஜயகாந்த் பாணி அரசியல்




அது மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியலில் முக்கிய இடத்தை பிடித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை சென்றவர் விஜயகாந்த். அவர் பாணியிலேயே ரசிகர் மன்றமாக துவக்கி, பிறகு அதை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளார் விஜய். அரசியலிலும் தொடர்ந்து விஜய்காந்த் பாணியை பின்பற்றி விஜய் திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது. தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் அவரது இடத்தை பிடித்து ரசிகர்கள் மற்றும் இளம் தொண்டர்களை கவர விஜய் முயற்சி செய்வார் என்றே சொல்லப்படுகிறது. 2024 ,லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என விஜய் தெரிவித்துள்ளதால் 2026 சட்டசபை தேர்தலில் முழு மூச்சாக விஜய் களம் இறங்க உள்ளார். 


2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தீவிர அரசியலில் ஈடுபட்டு, மிகப் பெரிய பலத்துடன் சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சாத்தியக் கூறுகள், வாய்ப்புக்கள் ஆகியவற்றை சரியாக பயன்படுத்தினால் 2026 சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு விஜய் நிச்சயம் கடும் நெருக்கடியை கொடுக்க வாய்ப்புள்ளது.