வா வாத்தியார்.. ராஜ்கிரணோடு மீண்டும் கை கோர்க்கும் கார்த்தி.. அருவாள்களுக்கு பஞ்சம் இருக்காது!
- அஸ்வின்
சென்னை: வா வாத்தியா் திரைப்படத்தின் முதல் பார்வை கார்த்தி பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கம் போல கமர்சியல் மசாலா மாஸ் என்டர்டைனர் ஆக இது இருக்கும் என்று இப்போதே தெரிகிறது.
சூது கவ்வும், எக்ஸ், காதலும் கடந்து போகும்.. இப்படி வித்தியாசமான அனுபவங்களை ரசிகர்களுக்குக் கொடுத்தவர் இயக்குநர் நலன் குமாரசாமி. அவரது இயக்கத்தில் ஒரு புதுவிதமான அனுபவத்தை இந்த வா வாத்தியார் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
வா வாத்தியார் படத்தில், முக்கியமான வேடத்தில் ராஜ்கிரன், சத்யராஜ் நடித்து இருப்பதால் இந்த படம் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. கொம்பன், விருமன், கடைக்குட்டி சிங்கம் என்று கிராமத்து படம் என்றாலே அச்சு அசலாக அதில் பொருந்திப் போவது கார்த்தி தான். அவர் மீண்டும் கமர்சியல் மசாலா படத்தில் களம் இறங்கி இருக்கிறார். அலெக்ஸ்பாண்டியன் பாணியில் இந்த திரைப்படம் எப்படி அவருக்கு கை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பருத்திவீரன் திரைப்படத்தில் பிள்ளையார் சுழி போட்ட அவரது பயணம் இன்று வா வாத்தியார் வரை வெற்றிகரமாக தொடர்ந்திருக்கிறது. மேலும் மிக மிக அருமையான திரைப்படங்களை அவர் அவரது கையில் வைத்துள்ளார். இது வெறும் சாம்பிள் என்று தான் நாம் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து வரப் போகும் அவரது படங்கள் கார்த்தியின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டும் என்று நம்பப்படுகிறது.
எம்ஜிஆர் புகைப்படங்களை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குனர் முக்கிமயாக வைத்துள்ளார். எம்ஜிஆர் அவர்களது தாக்கம் இந்த படத்தில் நிறைய இருக்கும் என்பது எனது கணிப்பு. எம்ஜிஆர் ரசிகனாக கூட இவர் படத்தில் வரலாம் என்பது எனது கணிப்பு. படத்தில் எம்ஜிஆர் ரெபரன்ஸ் இருக்கிறது. எம்ஜிஆரை பின் தொடர்வதில் சத்யராஜும், ராஜ்கிரணும் ரொம்பத் தீவிரமானவர்கள். இருவருமே தீவிரமான எம்ஜிஆர் ரசிகர்களும் கூட. சத்யராஜ் பல மேடைகளில் என் தலைவர் எம்ஜிஆர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அவரும் இந்த படத்தில் நடித்துள்ளதால் எம்ஜிஆரின் தாக்கம் நிறையாக இருக்கும் என்று கருதலாம்.
அதேபோல அருவா மீசை என்றாலே ராஜ்கிரன் தான். அவரும் இந்த படத்தில் இருப்பதால் அருவாக்களுக்கும் பஞ்சம் இருக்காது என்று இப்போதே உறுதியாக சொல்லலாம்.
மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு சந்தோஷ் நாராயணன் கார்த்தியுடன் இசையமைப்பாளராக இணைகிறார். இந்த திரைப்படத்தின் இசையும் மெட்ராஸ் படத்தின் இசை போல கார்த்திக்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
சர்தார் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் படங்களில் கலக்கிய கார்த்தி, அதேபோன்ற தோற்றத்தில் வா வாத்தியா் திரைப்படத்தின் போஸ்டர்களிலும் எதிரொலிப்பது ஒரு குதூகலகத்தை கிளப்பி உள்ளது. இது அவருக்கு கைவந்த கலை என்றுதான். ஒரே மாதிரியாக நடிப்பதில்லை கார்த்தி. அவ்வப்போது கமர்சியலாகவும் நடிப்பது அவரது வழக்கம். கமர்சியல் படத்தில் அவ்வப்போது நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைப்பதில் கார்த்தி கில்லாடி. அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரமும் சரி சர்தார் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த அந்த பாத்திரமும் சரி இரண்டுமே ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.
ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை அந்த இரு கதாபாத்திரமும் அளித்தது. சிறுத்தை படத்தில் போலீஸ் அதிகாரியாக செமத்தியான நடிப்பை அள்ளித் தெளித்திருப்பார் கார்த்தி. அதேபோல வா வாத்தியார் படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் அவர் இருப்பதே மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது கூஸ்பம்ப்சை ஏற்படுத்தி உள்ளது.