உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா?.. மீண்டும் படபடத்துக் கிளம்பிய கிசுகிசு!

Meenakshi
Jul 08, 2024,05:52 PM IST

சென்னை: முதல்வரின் அமெரிக்க பயணம் காரணமாக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக ஒரு தகவல்  கிளம்பியுள்ளது.


உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற பேச்சு இப்போது நேற்று அல்ல, பல மாதங்களாகவே அவ்வப்போது கிளம்பி வந்து கொண்டுதான் உள்ளது. சேலத்தில் கடந்த ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடந்தபோது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம் என்றும், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வதந்தி கிளம்பியுள்ளது.




ஜூலை 10ம் தேதி நடக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து சட்டமன்றத்தில் டிஆர்பி ராஜா  ஏற்கனவே கூறியிருந்தார். அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாடு  முதல்வர் முக ஸ்டாலின் அடுத்தமாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்களை சந்திக்க அவர் அமெரிக்கா செல்கிறார்" என்று கூறியிருந்தார்.


பல சந்தர்பங்களில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் இது வெடித்துக் கிளம்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால், முதல்வர் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். எனவே அதற்கு வசதியாக, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க திட்டமிடடப்படுவதாக இப்போதைய செய்திகள் கூறுகின்றன.


இந்த முறையும் இது வதந்தியாக இருக்குமா அல்லது நிஜமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.