உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பிருக்கா? .. வெளியான புதிய தகவலால் பரபரக்கும் தமிழக அரசியல்

Aadmika
Aug 28, 2024,06:47 PM IST

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலிலும், சோஷியல் மீடியாக்களிலும், டிவி விவாதங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வரும் தலைப்பாக இருந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும். அதோடு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற அறிவிப்பும் வெளியாக உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அமைச்சரவை மாற்றம் குறித்து தனக்கே தகவல் வரவில்லையே என முதல்வர் ஸ்டாலினே பதிலளித்து விட்டார். இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் உள்ளது.



இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் சமீபத்தில் கேட்டதற்கு, அப்படி ஒரு தகவல் உலா வருவதை நானும் கேள்விப்பட்டேன். கட்சி தலைமை என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்ற தயாராக இருப்பதாக கூறி இருந்தார். அதோடு தாங்கள் அனைவரும் உழைப்பது முதல்வர் ஸ்டாலுனுக்காக தான் என கூறி இருந்தார்.  அப்படி என்றால் துணை முதல்வர் குறித்த தகவல் உண்மை தானே என்ற பேச்சும் எழுந்தது.

தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி,   முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய 17 நாள் சுற்றுப்பயணமாக நேற்றே அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பி வந்த பிறகு தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி பற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளதாம். திமுக ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால் இப்போது அவரை துணை முதல்வராக அறிவித்தால் மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அவர் முன்னிறுத்த முடியும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி முதல்வர் பதிலளித்திருப்பதால், அமைச்சரவை மாற்றம் உண்மை தான் என்பதை அவரே மறைமுகமாக கன்ஃபார்ம் செய்துள்ளார். அதே போல் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி தகவலும் உண்மை தான் என கட்சி வட்டாரங்களும் கூறி வருகின்றன. உதயநிதி தற்போது இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதோடு சிறப்பு திட்ட செயலாக்கத்தையும் அவர் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

தற்போது வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால் செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு தமிழக அமைச்சரவையிலும், அரசியல் களத்திலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்