Party merger: சரத்குமார் பாணியில்.. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்ஸும் பாஜகவில் இணைவார்களா?

Su.tha Arivalagan
Mar 13, 2024,10:59 AM IST

சென்னை: கூட்டணிக்கு வருவது போல வந்து விட்டு, கட்சியையே பாஜகவுக்குள் இணைத்து விட்ட சரத்குமார் பாணியில், டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பாஜகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.


கட்சியுடன் கூட்டணி வைப்பது ஒரு வகையான அரசியல் என்றால், கட்சியைக் கொண்டு போய் இணைத்து அந்தக் கட்சியோடு ஐக்கியமாவது இன்னொரு வகை அரசியல். நீண்ட காலத்திற்குப் பின்பு தமிழ்நாட்டில் இப்படி ஒரு கட்சி  இன்னொரு கட்சியோடு இணைந்துள்ளது. அதுதான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. இந்தக் கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார் சரத்குமார். கடைசியாக தமிழ்நாட்டில் இரு கட்சிகள் இணைந்தது என்றால் அது ஜே. தீபாவின் கட்சியும், அதிமுகவும் இணைந்ததுதான். அதன் பிறகு சரத்குமார் கட்சியும், பாஜகவும் இணைந்துள்ளன.




நீண்ட காலத்திற்கு முன்பு இப்படித்தான் தமாகாவும், காங்கிரஸும் இணைந்தன. ஆனால் அதன் பின்னர் ஜி.கே.வாசன் மீண்டும் வெளியேறி மறுபடியும் தமாகாவை உயிர்ப்பித்து இப்போது வரை நடத்தி வருகிறார். அவரும் காலப் போக்கில் பாஜகவுடன் ஐக்கியமாவாரா என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் சரத்குமார் முந்திக் கொண்டு விட்டார்.


இந்த நிலையில் இன்னும் இருவர் மீது இப்போது இணைப்புப் பார்வை விழுந்துள்ளது. ஒருவர் தினகரன், இன்னொருவர் ஓபிஎஸ். தினகரன், அமமுக என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். இதுவரை தனித்துச் செயல்பட்டு வந்த அவர் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எங்களுக்கு என்ன வேண்டும் என்று பாஜகவுக்கு சொல்லி விட்டோம். எங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நிபந்தனையும் விதிக்கவில்லை. நிம்மதியாக இருக்கிறோம் என்று ஓபனாகவே கூறியுள்ளார் தினகரன்.


இந்த நிலையில் அவரும் சரத்குமார் பாணியில் கட்சியை பாஜகவில் இணைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இணைப்பு தேர்தலுக்கு முன்பு நடக்குமா அல்லது தேர்தலுக்குப் பின்னர் நடக்குமா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல ஓபிஎஸ்ஸையும் பாஜகவில் இணைந்து விடலாமே என்று கூறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் சற்று தயங்குவதாக தெரிகிறதாம்.


தேர்தலுக்கு முன்பு மேலும் சில குட்டிக் கட்சிகள் இதுபோல பாஜகவில் இணையக் கூடும் என்ற பரபரப்பான டாக் ஓடிக் கொண்டிருக்கிறது அரசியல் களத்தில்.