குவார்ட்டர்லி லீவு பத்தாது சார், கொஞ்சம் நீட்டிக்கலாமே, மாணவர்கள் எதிர்பார்ப்பு..பரிசீலிக்குமா அரசு?

Manjula Devi
Sep 24, 2024,08:52 PM IST

சென்னை:   தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிந்து ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த லீவு பத்தாது, கொஞ்சம் நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் கூட இதே கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே இந்தக் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 




தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கான வேலை நாட்கள் ஏற்கனவே 210 நாட்கள் இருந்த நிலையில் அதை கூடுதலாக்கி 220 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக காலாண்டு தேர்வு முடிந்து ஒரு வாரம் விடுமுறை விடப்படும். ஆனால் இந்த வருடம் பள்ளி வேலை நாட்கள் அதிகரிப்பால் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.


இந்த நிலையில் திடீரென பள்ளி வேலை நாட்கள்  210 நாட்களாக குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட நாட்காட்டியை அரசு வெளியிட்டது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு அறிவிப்பின்படி தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை ஐந்து நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. 


இதில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு, மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நீங்கலாக இரண்டு தினங்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர், ஆசிரியர்களும்தான். இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி  காலாண்டு விடுமுறையை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படுமா என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். அரசு பரிசீலனை செய்யுமா.. விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்