எலன் மஸ்க்கின் புதிய திட்டம்.. தப்புமா டிவிட்டர்.. பரபர எதிர்பார்ப்பில் டிவீப்பிள்ஸ்!
Jul 17, 2023,03:48 PM IST
- சகாயதேவி
சென்னை: சிறு தொழில் முனைவோராக இருந்தாலும் சரி பெரும் தொழிலதிபர்கள் என்றாலும் சரி, வியாபாரம் என்றால் ஏற்ற இறக்கம் இருக்கும். நாம் தினம் தோறும் பெரும்பாலான நேரத்தை கழிக்கும், ட்விட்டரும் இதற்கு விதிவிலக்கில்லை .
அதிக கடன் சுமை காரணமாக ட்விட்டரின் பணப்புழக்கம் எதிர்மறையாகவே உள்ளது என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் ட்விட்டர் பணப்புழக்கத்தில் பாசிட்டிவ் அடையும் என்று எலோன் மஸ்க் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.
செலவுக் குறைப்பு நடவடிக்கை:
கடந்த அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து ஆக்ரோஷமான செலவுக் குறைப்பு என அதிரடி நடவடிக்கைகள் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஆட்குறைப்புக்கு பின்னர் கிளவுட் சர்வீஸ் பில்களை குறைத்த பிறகு, நிறுவனம் தனது கடன் அல்லாத செலவினங்களை 2023ல் $4.5 பில்லியனில் இருந்து $1.5 பில்லியனாகக் குறைத்ததாக மஸ்க் கூறினார்.
விளம்பர வருவாயில் 50% வீழ்ச்சியால் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய், 2021ல் 5.1 பில்லியன் டாலரில் இருந்து 2023ல் 3 பில்லியன் டாலராக குறைந்து போய் விட்டதாக மஸ்க் கூறியுள்ளார். இதை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு போவது என தீவிரமான யோசனையில் ஈடுபட்டுள்ள அவர் புதிய திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை :
காம்காஸ்டின் என்பிசி யுனிவர்சலில் முன்னாள் விளம்பரத் தலைவரான லிண்டா யாக்காரினோவை சிஇஓவாக மஸ்க் பணியமர்த்தியது, சந்தா வருவாயை அதிகரிக்க ட்விட்டருக்கு விளம்பர விற்பனை முன்னுரிமை கிடைக்கும் என்பதை சமிக்ஞை செய்தது.
யக்காரினோ ஜூன் தொடக்கத்தில் ட்விட்டரில் பணியாற்றத் தொடங்கினார். மேலும் முதலீட்டாளர்களிடம் ட்விட்டர் வீடியோ, படைப்பாளர் மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு நபர்கள், பணம் செலுத்துதல் சேவைகள் மற்றும் செய்தி மற்றும் ஊடக வெளியீட்டாளர்களுடன் ஆரம்ப பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறினார்.