பாயிண்ட் பாயிண்ட்டாக.. அழுத்தம் திருத்தமாக.. எடுத்து வைத்த டாக்டர் தமிழிசை.. மீண்டும் தலைவர் ஆவாரா?

Aadmika
Jun 07, 2024,06:54 PM IST

சென்னை : லோக்சபா தேர்தல் 2024-ல் தமிழகத்தில் பாஜக பெற்ற படுதோல்வியை அடுத்து தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. அவரை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது.


அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால் கண்டிப்பாக 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயித்திருக்கலாம் என்று பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே கருத்துக்கள் எழுந்துள்ளன. அதிமுக தலைவர்கள் பலரும் இது பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.. உச்சகட்டமாக முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் தமிழிசையே கூட சேர்ந்து போட்டியிட்டிருந்தால் திமுக தோற்றிருக்கும். அந்த வியூகத்தை நாங்கள் விரும்பினோம். சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை என்று பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.




நடந்து முடிந்த லோக்பா தேர்தலில் தமிழகத்தில் முக்கிய பெரிய கட்சியான அதிமுக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜக., பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி போட்டியிட்டது. ஆனால் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 


பாஜக கூட்டணி மட்டுமன்றி, அதிமுக கூட்டணிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.  அந்தக் கட்சி தேமுதிகவை அணி சேர்த்துக் கொண்டு போட்டியிட்டது. இதில் அதிமுக தரப்பில் விஜய பிரபாகரன் விருதுநகரில்,  பல சுற்றுக்களில் முன்னணியில் இருந்து வந்தார். அதேபோல பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா முன்னணி வகித்து வந்தார். கடைசி நேரத்தில்தான் இருவரும் தோல்வியைத் தழுவினார்கள். மாறாக, அதிமுகவோ அல்லது பாஜகவோ ஒரு தொகுதியில் கூட ஒரு சுற்றில் கூட முன்னணி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டிருந்தால் இரண்டு கட்சிகளுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. பரவலாக மக்களிடம் கருத்து எழுந்துள்ளது. இதை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிவு செய்துள்ளார். அதோடு, அதிமுக-பாஜக கூட்டணி அமையாமல் தடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலை தான் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இனி பாஜக.,வுடன் எந்த நாளிலும் கூட்டணி கிடையாது என்றம் தெரிவித்தார். இது பற்றி அண்ணாமலையிடம் கேட்டதற்கு அவரும் அதிமுக.,வுடன் இனி கூட்டணி என்பதே கிடையாது என்றார்.


அதே சமயம் இவர்களின் கருத்து பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், கூட்டணி என்பது அரசியல் வியூகம். அதை மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி சரியாக கையாண்டுள்ளது. அதிமுக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் இந்த அளவிற்கு தோல்வி ஏற்பட்டிருக்காது என்பது தான் கள உண்மை. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடைசி வரை கடும் போட்டி கொடுத்த விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரேமலதாவின் கருத்தை நான் ஏற்கிறேன். கடைசி நேரத்தில் மாவட்ட கலெட்டருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக நான் கேள்விட்டேன். அது பல இடங்களில் நடந்துள்ளது.


தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் மாநில அரசு ஊழியர்கள். அதனால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவது ஆச்சரியமில்லை. கண்டிப்பாக மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டால் விஜய பிரபாகரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அப்படி அவர் வெற்றி பெற்றால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும் யார் என்ன கிண்டல் செய்தாலும் விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் உறுதியாக சொன்னார்.




நேற்றைய பேட்டியின்போது பாஜக ஐடி விங்கையும் திமுக ஐடி விங்கையும் ஒரு சேர கடுமையான வார்த்தைகளால் எச்சரித்திருந்தார் தமிழிசை என்பது முக்கியமானது. இதுவரை பாஜக ஐடி விங்கை பாஜக மூத்த தலைவர் ஒருவரே விமர்சித்தது கிடையாது. ஆனால் பாஜக ஐடி விங்கின் செயல்பாடுகள் குறித்து பாஜகவுக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவி வந்ததாக தேர்தலுக்கு முன்பே கூட குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. அதைத்தான் தற்போது தமிழிசையின் குமுறல் வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.


அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக.,விற்கு ஆதரவாகவும் நடுநிலைமையாகவும் பேசிய தமிழிசையின் கருத்து வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் நேரத்திலேயே பலருக்கும் அண்ணாமலை மீது அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடாக கூட தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தமிழக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவாரா என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. அப்படி நடந்தால் அவருக்கு பதில் மீண்டும் தமிழிசை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.