திமுக வலுவாக இருக்கிறது.. சூப்பரான கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்கும் வாய்ப்பு.. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Su.tha Arivalagan
Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: திமுக கூட்டணி வலுவாகவே இருக்கிறது. அதேசமயம், அதிமுக தரப்பில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டால் அக்கூட்டணி வெல்லவும் வாய்ப்பிருப்பதாக மூத்த அரசியல்வாதியான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணித்துள்ளார்.


தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சட்டசபைத் தேர்தலை நோக்கி ஒவ்வொரு கட்சியும் வேகமாக நடை போட ஆரம்பித்து விட்டன. விஜய் இன்னும் ஆக்டிவாக களத்தில் குதிக்கவில்லை. அதேசமயம், அவர் அவ்வப்போது வெளியே வந்து ஏதாவது பேசினாலே, அது பல நாட்களுக்கு பேசு பொருளாக இருக்கிறது. அவருக்குக் கூடும் கூட்டமும் கட்டுக்கடங்காததாக இருக்கிறது.


இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


வருகின்ற 2026 ஐ இலக்காகக் கொண்டு தமிழகத்தில் வரும் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தன்முனைப்பில் இருக்கின்றன.


திமுக மீது அதிருப்தி இருக்கிறது




திமுகவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்காகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அது இதுவரை நிறைவேற்றவில்லை! ஆனால் முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் நாங்கள் 90 சதவீதம் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லுகிறார். அது நம்பத் தகுந்த உண்மை அல்ல.! ஆனால் திமுகவிற்கு வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பணம் அதிகம் செலவு செய்து ஓட்டுக்களை விலைக்கு வாங்க முடியும் என தைரியம் திமுகவுக்கு. இந்தக் கூட்டணியில் எங்கேனும்  பழுது ஏற்பட்டால் அது திமுகவிற்குள்ளே உண்டாகும் பழுதாகும்!


அதே சமயம் இன்னொரு புறத்தில் அதாவது இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக ஒரு வலுவான கூட்டணியை அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது! என்பதையும் மறந்து விட முடியாது. அப்படி ஒரு வலுவான கூட்டணி என்றால் பாமகவும் விஜயின்  த வெ க வும்  அதிமுகவுடன் இணையும் பட்சத்தில் அது சாத்தியமாகலாம். இப்படியான நிலையில் இது எந்த முடிவைச் சென்றடையும் என்பதைச் சொல்ல இப்போதைக்கு இயலவில்லை. ஆனால் ஆளும் கட்சியான  திமுகவிற்கு இந்த இரண்டு மூன்று வருடங்களுக்குள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களே நிறைவேற்றாததால் அவர்கள் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியும் இருக்கிறது.


மக்களிடம் கொண்டு செல்லத் தவறிய அதிமுக




அந்த அதிருப்தியை அதிமுக இன்னும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை, அதேபோல் அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் எப்படி தமிழகம் எங்கும் சுற்றினாரோ நடைபயணம் மேற்கொண்டாரோ அதுபோல இவர் மேற்கொள்ளவில்லை! அதை அவர் மேற்கொண்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள், தேர்தல் வருகிற அதற்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில் இந்த முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.


ஆளும் கட்சியின் மீதான அதிருப்திகளை ஒருங்கிணைத்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி அதற்கு வேண்டிய பிரச்சாரங்களையும் அதற்குரிய திட்டங்களையும் தீட்டியிருக்க வேண்டும். குறிப்பாக திமுகவின் மக்கள் விரோதப் போக்குகளை எதிர்க்கட்சிகள் முறையாக மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்லவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை இதை மேற்கொண்டார்.


மூன்றாவதாக பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை சென்ற தேர்தலின்போது அதன் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அதற்கான கணிசமான பலன்கள் கிடைத்தன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. பாரதிய ஜனதாக் கட்சியைப் பொறுத்த வரை அது மட்டும் போதுமானது அல்ல. அவர்கள் தமிழ் மொழிக்கான விழாவை வடக்கே கங்கைக்கரையில் வாரணாசியில் நடத்தியதைப் போன்றே தமிழ் மொழியை மையப்படுத்தி தமிழகத்தில் முச்சங்கம் கண்ட மதுரையில் அதற்கான ஒரு விழாவைப் பிரமாண்டமாக எடுத்து இருக்க வேண்டும்! 


எடப்பாடி பழனிச்சாமியை மிஞ்சிய அண்ணாமலை




இது பற்றி நானே பலமுறை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சொல்லி இருக்கிறேன். அதேபோல் ஈழத்தமிழர் பிரச்சனையில் பாஜகவின் கொள்கைக்கேற்ப பேச வேண்டுமே ஒழிய பிரபாகரன் ஒரு கிறிஸ்துவர் என்கிற ஒரு பார்வையை வைத்துக்கொண்டு புறம்பாகப் பேசக்கூடாது. பிரபாகரன் ஒரு கிறிஸ்துவர் அல்ல. அவர் தினந்தோறும் முருகப்பெருமானை வணங்குபவர் என்ற வகையில் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மகனுக்கு சார்லஸ் என்று ஏன் பெயர் வைத்தார் எனில் இயக்கத்தில் வீரச்சமர் செய்து மாண்டு போன ஒரு இளைஞனின் பெயர் சார்லஸ் என்பதால் அவர் நினைவாக தன் மகனுக்கு அப்பெயரை வைத்தார். பிரபாகரன் குடும்பமே சைவக் குடும்பம். அவர் தந்தையார் தேவாரம் திருவாசகம் பதிகங்களை மரபாகக் கொண்டவர். 


அது ஒருபுறம் இருக்க நான்காவது ஆக விஜய். அவர் கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவராக இருக்கின்றார். புதிய இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். என்னக் கேட்டால் அது மட்டுமே போதுமானது அல்ல. அவரது செயலாளராகப் பணியாற்றி வரும் புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். அவருடைய அரசியல் எல்லைகளும் அதற்குள் தான் இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் ஏற்ற இறக்கங்கள் அவருக்குத் தெரியாது. அதை மிகக் கவனமாக கொண்டு செலுத்த வேண்டும். விஜய்க்குள்ள மரியாதையை வைத்துக் கொண்டு புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாட்டில் அதன் பெயரால் அரசியல் நடத்தலாம். அது மட்டுமல்லாமல் தற்சமயம் உள்ளே  வந்திருக்கிற ஆதவ்விடம் அதை கொடுத்து மிகச் செம்மையாக நடத்த வேண்டும். விஜயும் இதைப் புரிந்து கொண்டு ஒரு வலுவான போட்டியுடன் கூடிய கூட்டணியை அமைத்தால் தான் வெற்றி பெற முடியும்.


விஜய்க்கு உள்ள மக்கள் செல்வாக்கு




இதற்கிடையில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ள இளைஞர்களின்  ஆதரவு விஜய்க்கு வலிமையாகவே இருக்கிறது. அதுபோக பொதுவான ஓட்டுகள் என்கிற முறையில் பார்த்தாலும் கூட 10- 13 சதவீதம் ஓட்டுகள் விஜய்க்குக் கிடைக்கும். இந்த இளைஞர்களின் பின்னணியில் உள்ள குடும்பப் பெற்றோர்கள் வயதானவர்கள் முதியவர்கள் கூட இந்த இளைஞர்களின் மனப்போக்கு ஏற்ப விஜய்க்கு வாக்களிக்கவும் கூடும். இதில்சில தாய் தந்தைகள் வேண்டுமானால் ஓட்டுக்குப் பணம் வாங்குவார்கள். இளைஞர்களை நாம் அப்படி மதிப்பிட்டு விட முடியாது. எவ்வளவுதான் பணம் செலவழித்தாலும் மன மாறுதலும் புதிய அலை வரிசைகளும் ஆளும் அரசின் மீதான அதிருப்தியும் சேரும்போது தேர்தல் விடைகள் திசை மாறலாம்.


அதன் அடிப்படையில் விஜய் சென்னையில் மட்டும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினால் மட்டும் போதாது. தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களிலும் இந்த விழாக்களை அவர் நேரில் வந்து நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டும். தேர்தலைப் பொறுத்தவரையில் பல்வேறு களங்கள் இருக்கின்றன. அந்தந்தக் களங்களில் வந்து நின்று செயலாற்ற வேண்டும் என்பதுதான்  முக்கியம். தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்காகவும் போராட வேண்டும். யோசிக்கும்போது இன்னொரு புறம் விஜயுடன் அரசியல் அனுபவம் வாய்ந்த பழைய அறிவாற்றலும் செயலாற்றலும் மிக்க தலைவர்கள் யாரும் இல்லை. என்றாலும் ஓட்டு வங்கியும் இளைஞர் சக்தியும் அவர் பக்கம் இருக்கிறது!


எம்ஜிஆர் பாணியில் செயல்படுவது அவசியம்




எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேறும் போது அவருக்கு மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல திமுகவில் திறமை வாய்ந்த பழைய தலைவர்கள் எஸ்டி சோமசுந்தரம்,  அண்ணா காலத்து விவி சாமிநாதன், காளிமுத்து போன்ற  தலைவர்கள் பலரும் வெளிவந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து அரவணைத்துக் கொண்டார்கள். அவரை வழி நடத்தினார்கள். அதே சமயம் எம்ஜிஆர் போல சிவாஜி கணேசனும் ஸ்தாபன காங்கிரஸ் குறிப்பாக காமராஜரின் நினைவில் தமிழக முன்னேற்ற முன்னணி தனிக் கட்சியைத் தொடங்கினார். அவருக்கு வெறும் ரசிகர்கள் மட்டுமே இருந்தார்கள். ராஜசேகரனும், தளபதி சண்முகம்மே அவரது அமைப்பு பணிகளைச் செய்ததனால் சிவாஜி கணேசன் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை.


எங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தக் காலங்களில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றமும் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் மாவட்டங்கள் தோறும் ஊர்கள் தோறும்  சரி சமமாக இருந்தன. ஆனால் எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது அவரது அணுகுமுறை திமுகவில் இருந்த போது அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் அது போக திமுகவிலிருந்து  அப்போதே பிரிந்து வந்த பல மூத்த தலைவர்களின் அரவணைப்பு எல்லாம் அவருக்கு எளிதாகக் கிடைத்தது. அன்றைய திமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பதில் எம்ஜிஆருடன் பலரும் இணைந்து வெற்றி கண்டனர். ஆனால் சிவாஜி கணேசன் ஆரம்பித்த  தமிழக  முன்னேற்ற முன்னணி கழகம் சோபிக்கவில்லை. ஆந்திரா என.டிஆர், எம்ஜிஆர் மாடல் எடுத்து ஆட்சியை பிடித்தார்.


புஸ்ஸி ஆனந்த் மட்டும் போதாது




இப்படியாக விஜய் தனது அரசியல் வரவிற்குள் நின்று கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் புஸ்ஸி ஆனந்தோ, ஜான் போன்றவர்கள் உடனிருப்பதாலோ எந்த மாயங்களும் நடந்துவிடாது. அனுபவம் வாய்ந்த தமிழக அரசியல் அறிந்த தலைவர்கள் வேண்டும். தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை பூத்துக்குக் கொண்டு வந்து ஈவிஎம் மிஷினில் வாக்களிக்க வைப்பது என்கிற முறையில்  அமைப்பு ரீதியாக அவற்றின் ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொகுதிகள், வட்டாரங்கள் அனைத்தையும் பற்றிய அறிவு வேண்டும்.


இப்படியான பல சூழ்நிலைகள் குழப்பமாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒன்று கூடி திமுகவை வீழ்த்த நினைத்தாலும் இதில்  உண்டாகும் பலவீனங்கள் ஏதும் இருப்பின் மீண்டும் திமுக தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறதோ என்கிற அனுமானம் எங்களைப்போல் 50 60 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு அதன் வரலாற்றுத் தாத்பரியங்கள் புரிந்தவர்களுக்குத் தோன்றுகிறது. இவற்றுக்கு அப்பாலும் இன்றைய ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. எதிர் கட்சி வலுவான மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட வேண்டும்.


மீன் துறையும் அம்பலமும். காத்திருந்தவர்களுக்கு தான்! பொறுத்திருந்து பார்ப்போம்!


நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

மூலக் கட்டுரை: https://x.com/KSRadhakrish/status/1897989881101795363