திமுக - அதிமுகவின் "பொது எதிரி"யாகும் பாஜக.. இப்படி நடக்க வாய்ப்பிருக்கா?
Sep 25, 2023,12:45 PM IST
சென்னை: கற்பனையில் மட்டுமே நினைத்துப் பார்க்கக் கூடிய விஷயமாக இது தோன்றினாலும் கூட அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற இலக்கணக்கப்படி இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கா என்று பலரையும் நினைத்துப் பார்க்க வைத்துள்ளது அதிமுக - பாஜக இடையிலான மோதல்.
பெரியாருடன் ஏற்பட்ட பூசல் கருத்து வேறுபாடு காரணமாக பிறந்ததுதான் திமுக. அண்ணா உருவாக்கிய திமுக அவரது மறைவுக்குப் பின்னர் இரண்டாக உடைந்தது. எம்ஜிஆர் தலைமையில் அண்ணா திமுக உருவானது. திமுக கருணாநிதி தலையில் தொடர்ந்து இயங்கியது.
இருவரும் தனித் தனிப் பாதையில் போக ஆரம்பித்த பின்னர் அதுவரை திமுக - காங்கிரஸ் என்று இயங்கி வந்த தமிழ்நாட்டு அரசியல் திமுக - அதிமுக என்று மாற ஆரம்பித்தது. அன்று முதல் இன்று வரை அதுதான் அரசியலாகவும் இருந்து வருகிறது. இந்த இரு கட்சிகளையும் பிரித்துப் பார்த்தால் தமிழ்நாட்டு அரசியலே கிடையாது.
இடையில் எத்தனை எத்தனையோ இயக்கங்கள் பிறந்தன.. இதை உடைக்க முட்டி மோதின.. மதிமுக வந்தது, பாமக முயன்றது, தேமுதிக மோதிப் பார்த்தது.. இப்போது பாஜக அந்த வேலையைச் செய்து கொண்டுள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்துமே பலமான அதிமுக, திமுகவை எதிர்த்து மோதியவையாகும். ஆனால் பாஜக மட்டும் இதில் வித்தியாசமாக, அதிமுகவை பலவீனப்படுத்தி அதை வைத்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.
பாஜகவின் நோக்கம் ஒன்றுதான்.. அதிமுக பலவீனமாகி அடியோடு காலியாக வேண்டும். திமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும். இதற்காகத்தான் அது ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்து வருகிறது. ஆனாலும் இதுவரை அதில் பெரிய அளவில் அக்கட்சியால் வெற்றி காண முடியவில்லை. அதிமுக பலவீனப்பட்டாலும் கூட அதன் அடித்தளம் இன்னும் வலுவாகவே இருப்பது பாஜகவுக்கு உறுத்தலாகவே இருக்கிறு. மறுபக்கம் திமுக முன்பை விட பலமாக மாறி நிற்கிறது.
ஒரு காலத்தில் பிரிந்து போய்க் கிடந்த எம்ஜிஆரையும், கருணாநிதியும் ஒன்று சேர்க்க பலமுயற்சிகள் நடந்தன. அதில் முக்கியமானது மறைந்த ஒடிஷா தலைவர் பிஜூ பட்நாயக் எடுத்த முயற்சிகள். இரு தலைவர்களையும் சென்னைக்கு வந்து நேரில் சந்தித்துப் பேசினார். இருவரையும் தனியாகவும் சந்திக்க வைத்துப் பேச விட்டார். எல்லாம் நன்றாகவேப் போயின. ஆனால் கருணாநிதி போட்ட சில நிபந்தனைகளாலும், எம்ஜிஆர் சைடில் சிலர் செய்த சதியாலும் இது நடக்காமல் போய் விட்டது. இல்லாவிட்டால் திமுக அதிமுக எப்போதோ ஒன்றாக இணைந்திருக்கும்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று பலரும் யோசனை கூறினர். எம்ஜிஆர் மறைந்தபோதும் கூட அந்தப் பேச்சு வந்தது. அப்போது ஜெயலலிதா ரூபத்தில் அதற்கு முட்டுக்கட்டை வந்து சேர்ந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் இதே போன்ற பேச்சு வந்தது. ஆனால் அது பெரிதாக பேசப்படவில்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவாகவே இருக்கிறது.
என்னதான் மேலிட பாஜகவின் ஆதரவு இருந்தாலும் கூட, மாநில பாஜக தலைமைக்கு எதிராக இறங்கி அடிக்கிறது அதிமுக. குறிப்பாக அண்ணாமலைக்கு எதிராக தைரியமாகவே பேசி வருகிறது அதிமுக. ஆனாலும் மேலிட பாஜக இடை இடையே புகுந்து அழுத்தம் தருவதால் கூட்டணியில் சுமூக நிலைமை இல்லாமல் போய் விட்டது.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சுக்கள் அதிமுகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. குட்ட குட்ட குனிவது போன்ற நிலையில் எத்தனை காலம்தான் இருப்பது என்ற விரக்திக்கு பல அதிமுக தலைவர்கள் வந்து விட்டனராம். ஆனால் இவர்களின் சண்டையை திமுக உள்ளூர ரசித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் திமுக - அதிமுக இடையே ரகசிய உறவு ஏதாவது ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக கிளம்ப ஆரம்பித்துள்ளது. பாஜகவிடமிருந்து ஒரு வேளை அதிமுக பிரியுமானால் சரமாரியான அமலாக்கப் பிரிவு ரெய்டு உள்ளிட்ட பல்வேறு அட்டாக்குகளை சந்திக்க நேரிடும்.. அப்படி நேரிடும்போது அதை சமாளிக்க வலுவான ஆதரவு அதிமுகவுக்குத் தேவைப்படும். அதை திமுகவால் தர முடியும் என்ற நம்பிக்கை அதிமுகவினர் சிலரிடமே உள்ளது.
இப்படி சிந்திக்க அதிமுகவினர் தக்க காரணத்தை முன்வைக்கின்றனர். ஒரு காலத்தில் எம்ஜிஆரும், கருணாநிதியும் எதிரும் புதிருமாக இருந்தபோதும் கூட தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலேயே இருந்தனர். எம்ஜிஆர் -கருணாநிதி இருந்த காலத்தில் திமுக, அதிமுக தான் அரசியலாக இருந்தன. இவ்விரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்ததன் காரணமாகவே, வேறு கட்சிகள் தலைதூக்காமல் இருந்தன எனலாம்.
ஜெயலலிதா தலையெடுத்த பிறகுதான் திமுகவை மிகப் பெரிய அளவில் விரோதியாக பார்க்கத் தொடங்கியது அதிமுக. ஜெயலலிதாவின் தனிப்பட்ட சில கொள்கைகளும் அதற்கு முக்கியக் காரணம். இப்போது பெரும் தலைவர்கள் யாரும் இல்லை. திமுகவும் கூட பாஜகவிடமிருந்து பல்வேறு நெருக்குதல்கள், அழுத்தங்கள், பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அதிமுகவுக்கும் அதே பிரச்சினைதான். கிட்டத்தட்ட இந்த இரு கட்சிகளுக்கும் பொதுவான எதிரியாக பாஜக மாறி வருகிறது. அதுதான் பாஜகவின் ரியல் திட்டமும் கூட. கழகங்கள் இல்லாத களத்தைத்தான் அதுவும் எதிர்நோக்கி காய் நகர்த்தி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் திமுகவும், அதிமுகவும் ரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ கை கோர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நிச்சயம் யாரும் மறுப்பதற்கில்லை. அது நடந்தாலும் நடக்கலாம்.. நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்கள். திமுகைப் பொறுத்தவரை அதிமுக இருக்க வேண்டியது அக்கட்சிக்கு முக்கியம். அப்படி இருந்தால்தான் அது எளிதாக அரசியல் செய்ய முடியும். மக்கள் மனதிலும் திமுக - அதிமுக மட்டுமே இன்னும் அழுத்தமாக இருக்கிறது.
அண்ணாமலை ரூபத்தில் இப்போது அதிமுகவில் பெரும் விரிசல் வருகிறது. திமுகவும் கூட அண்ணாமலை மீது காட்டமாகவே இருக்கிறது. என்னதான் பிரதான எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும், அண்ணாமலை அதிமுகவை ஓரம் கட்டிவிட்டு பாஜகவை வலுவான எதிர்கட்சியாக உருவாக்கி வந்தார். இதை அதிமுக ரசிக்கவில்லை என்ற போதிலும் கூட சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என்று அதன் பிரச்சினைகள் மடை மாற்றப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது அதிமுகவை முடக்கும் அளவுக்கு அண்ணாமலையின் போக்கு இருப்பது அதிமுக வை அதிர வைத்துள்ளது.
அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதனால், அதிமுகவினரை அண்ணாமலை மதிக்காத போக்குடன் நடப்பதால், அதிமுக தொண்டர்கள் பாஜகவிற்கு மனமார வாக்களிப்பார்களா? என்ற கேள்வி நிலவி வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் பாஜகவிற்கு பலமே அதிமுக தான். இதனை மறுக்க முடியாது. அதேசமயம், அதிமுக இடத்தில் தன்னை அமர வைக்கவும் பாஜக துடிக்கிறது. இதற்காகத்தான் அதிமுகவை விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், அதிமுக வை மிரட்டி தான் பாஜக கூட்டணியில் வைத்துள்ளது. அவர்களுக்குள் நடப்பது சண்டையே அல்ல.. நடிக்கிறார்கள் என்று குத்திக் காட்டியிருந்தார். அவரது பேச்சு உண்மைதானோ என்பது போல, அண்ணாமலையும் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஊழல் வழக்குகள் உள்ளதை அதிமுக தலைவர்கள் மறந்து விடக் கூடாது மறைமுகமாக அதிமுவினரை மிரட்டியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பேசாமல் திமுக அதிமுக சேர்ந்து விடலாம்.. கட்சிகள் இணையாவிட்டாலும் கூட இணைந்து செயல்படலாம்.. இருவருக்கும் எதிரான போக்கில்தான் பாஜக உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் அதிமுக, பாஜகவிடம் பணிந்து போக வேண்டும் என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்து விட்டன.
எம்ஜிஆர் -கருணாநிதி இருந்த காலத்தில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்தாலும் திமுக-அதிமுக தலைவர்கள் நண்பர்களாகவே இருந்தனர். இவ்விரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அழிக்க எண்ணியது கிடையாது. இதன் காரணமாகவே மற்ற கட்சிகள் தலைதூக்காமல் இருந்தன. இப்போது இருவருக்கம் பொது எதிரியாக பாஜக மாறி வருவதால், இருவரும் இணையும் பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியுள்ளன.