வறண்டு போன வாக்கு வங்கி.. விஜயகாந்த்தும் இல்லை.. யாருடன் கூட்டணி சேரப் போகிறது தேமுதிக?

Su.tha Arivalagan
Feb 02, 2024,06:18 PM IST

சென்னை:  யாருடன் கூட்டணி சேரும் தேமுதிக.. விஜயகாந்த் இல்லாத நிலையில் தேமுதிகவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்.. லோக்சபா தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, அவரது காலத்திலேயே மிகப் பெரிய உச்சத்தையும் தொட்டு, மிகப் பெரிய சரிவையும் கண்ட கட்சி. அவரது அதிரடியான அரசியலை மக்கள் ஆரம்பத்தில் மிகப் பெரிய அளவில் வரவேற்றார்கள். ஆனால் எப்போது கூட்டணி அரசியலுக்கு அவர் மாறினாரோ அப்போதே அவர் மீதான பிடிப்பையும் மக்கள் நழுவ விட்டு விட்டார்கள்.


ஒரு மனிதராக விஜயகாந்த் மீது பாசம் வைத்திருப்போர் கோடிக்கணக்கில் உள்ளனர்.. அதற்கு சின்ன உதாரணம்தான் அவரது இறுதிச் சடங்கின்போது கூடிய கூட்டம். ஆனால் அரசியல்வாதி விஜயகாந்த்துக்கு அவ்வளவு பேர் ஆதரவு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.




இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு ஆப்ஷன்களை மட்டுமே இப்போதைக்கு தேமுதிக வைத்திருப்பதாக தெரிகிறது. காரணம், அது கேட்கும் அளவிலான தொகுதிகளைத் தரும் நிலையில் இந்த இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. திமுகவில் ஹவுஸ்புல் போர்டு மாட்டாத குறையாக கட்சிகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. அவர்களுக்கே கூட கொடுக்க திமுக திணறும் நிலையில்தான் இருக்கிறது.


எனவே அதிமுகவுடன் சேர வேண்டும் அல்லது பாஜகவுடன் போக வேண்டும்.. என்ற நிலையில் தேமுதிக இருக்கிறது. இதில் யாருடன் சேர்ந்தால் வெற்றிக்கு வாய்ப்புண்டு என்பதையும் தேமுதிக அலசிப் பார்த்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த முறை போலவே இந்த முறையும் 4 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற நிபந்தனையுடன் கூட்டணிக்கு தேமுதிக முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக தரப்பிலும்,  பாஜக தரப்பிலும் தேமுதிக தரப்பு மறைமுகமாக பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


இருப்பினும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக சொல்லாதவரை எதுவும் உறுதியில்லை என்பதையும் மறுக்க முடியாது. சரி கடந்த தேர்தல்களில் தேமுதிகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன. திரும்பிப் பார்ப்போம்.


தேமுதிகவின் லோக்சபா தேர்தல் வரலாறு





2009 லோக்சபா தேர்தலில் 40 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. அதில் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அந்தக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 31 லட்சத்து 26 ஆயிரத்து 117 ஆகும். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 0.75 சதவீத வாக்குகளைப் பெற்றது தேமுதிக.


தேமுதிக சந்தித்த 2வது நாடாளுமன்றத் தேர்தல் 2014ல் நடந்த இந்தியாவால் மறக்க முடியாத லோக்சபா தேர்தல்.  இந்தத் தேர்தலில் வென்றுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தனது முதல் ஆட்சியை அமைத்தது.  இத்தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.  பாஜக, பாமக, மதிமுக, புதிய நீதிக் கட்சி, கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்து போட்டியிட்ட இத்தேர்தலில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது.  தேமுதிக பெற்ற வாக்குகள் சரிந்தன. அதாவது வெறும் 20 லட்சத்து 78 ஆயிரத்து 843 வாக்குகளே கிடைத்தன. வாக்கு சதவீதமும் 0.38 ஆக சரிந்து போய் விட்டது. 


அதன் பின்னர் 2019 லோக்சபா தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே தேமுதிக போட்டியிட்டது. நான்கிலும் தோற்றது. இதில் கிடைத்த வாக்குகள் வெறும் 9 லட்சத்து 29 ஆயிரத்து 590 மட்டுமே. வாக்கு சதவீதம் 0.15 என்ற அளவுக்கு அடியோடு சரிந்து விட்டது. இத்தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது தேமுதிக.


சட்டசபைத் தேர்தல் வரலாறு





தேமுதிகவின் அரசியல் வரலாற்றைப் பார்த்தோமானால், சட்டசபைத் தேர்தலை விட லோக்சபா தேர்தல் வரலாறுதான் மிக மோசமாக உள்ளது. அதாவது மக்கள் சட்டசபைத் தேர்தலில்தான் தேமுதிகவுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் பெரிதாக தேமுதிகவை அவர்கள் ஆதரிக்கவில்லை. 

சட்டசபைத் தேர்தலில் அறிமுகமான 2006 தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளில் போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 209 தொகுதிகளை வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 7.88 சதவீதமாக குறைந்தது.


2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்டு எதிலும் வெல்லாமல், 2.39 சதவீத வாக்குகளையே அது பெற்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் நிலைமை இன்னும் மோசமாகி 60 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு எதிலும் வெல்லாமல், 0.43 சதவீத வாக்குகளையே அது பெற்றது.


விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தல்





விஜயகாந்த் இருந்தபோதே படிப்படியாக தேய்ந்து போய் விட்ட நிலையில்தான் தேமுதிக இருந்தது. அவரது உடல் நலக்குறைவு அதற்கு மிக முக்கியக் காரணம். பல பீல்ட்ஒர்க்கர்கள் மாற்றுக் கட்சிகளுக்குப் போய் விட்டது இன்னொரு காரணம்.. தவறான கூட்டணிகள், சரிவர கையாளப்படாத கொள்கைகள் என பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம்.


இப்போது விஜயகாந்த் மறைந்து விட்டார். அவர் மீது அபிமானம் கொண்டவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்றாலும் கூட, அரசியல் என்று வந்து விட்டால், எத்தனை பேர் தேமுதிக பக்கம் திரள்வார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. விஜயகாந்த் இருந்தபோதே அவரை ஆதரிக்கத் தவறியவர்கள், இப்போது அவரே போய் விட்ட பின்னர், தேமுதிகவை எப்படி தாங்கிப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




விஜயகாந்த் இல்லாமல், பிரேமலதா விஜயகாந்த் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் இது. தேமுதிகவுக்கும் அப்படித்தான். இந்த நிலையில்தான் இக்கட்சி யாருடைய கூட்டணியில் இடம் பெறும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் வழக்கமாக பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோர்தான் கலந்து கொள்வார்கள். இந்த முறை இளைய மகன் சண்முகப் பாண்டியனும் கூட பங்கேற்க வாய்ப்புள்ளது.


பிரேமலதா விஜயகாந்த் எடுத்து வைக்கப் போகும் அடியானது.. அவரது எதிர்காலத்தை மட்டுமல்லாமல், தேமுதிகவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பதால் அனைவரது பார்வையும் அவரது முடிவுகளை நோக்கித் திரும்பியிருக்கிறது.