27 வருடத்திற்கு முன்பு இழந்த ஆட்சியை.. மீண்டும் கைப்பற்றுமா பாஜக.. டெல்லியில் கடும் போட்டா போட்டி!

Manjula Devi
Feb 08, 2025,10:49 AM IST

டெல்லி: டெல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி  நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போது ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலைமை உருவாகியுள்ளது.

டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் உட்பட மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த சட்டமன்ற தேர்தலில் 60.5 சதவீகித  வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகின்றன. 

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 19 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தபால் வாக்குகளில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில்  போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தபால் வாக்குகளிலேயே ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் ஆதரவை ஆம் ஆத்மி கணிசமாக இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. மக்கள் அளித்த வாக்குகளை எண்ண ஆரம்பித்தபோது, முதலில் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டா போட்டி இருந்தது. பின்னர் பாஜகவின் கை வலுவாக ஓங்கியது. பின்னடைவுக்குப் போனது ஆம் ஆத்மி. பிறகு மீண்டும் இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைந்தது. தற்போது மீண்டும் பாஜகவின் கை ஓங்கி விட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

27 வருடத்துக்குப் பிறகு பாஜக ஆட்சி?




அதாவது டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த மூன்று முறையில் பத்து வருடங்களாக ஆட்சியைப் பிடித்த வந்த ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சியை இழக்கும் நிலை உள்ளது.  டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 36 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் பாஜக தற்போது 40 இடங்களுக்கும் மேலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் 27 வருடங்களுக்குப் பிறகு பாஜக ஆட்சி மீண்டும் அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தது. 1993ம் ஆண்டு மாநிலமாக மாற்றப்பட்ட பின்னர் முதல் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் பாஜகவின் முதல் ஆட்சியில் அடுத்தடுத்து அதிருப்தி, உட்கட்சி மோதல்களால் மொத்த பதவிக்காலத்தில் 3 முதல்வர்களை டெல்லி கண்டது. முதல் டெல்லி முதல்வராக இருந்தவர் மதன் லால் குரானா.  அவருக்கு அடுத்து சாஹிப் சிங் வர்மா முதல்வரானார். அவரைத் தொடர்ந்து கடைசியாக சுஷ்மா சுவராஜ் முதல்வராக பதவி வகித்தார்.

அதந் பின்னர் 1998ல் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்தது பாஜக. 98 மட்டுமல்லாமல், 2003, 2008 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. மூன்று முறையும் முதல்வராக இருந்து அசத்தினார் ஷீலா தீட்சித். அதன் பின்னர் 2013 தேர்தலில் நிலைமை மாறி ஆம் ஆத்மி வசம் டெல்லி போய் விட்டது. அதைத் தொடர்ந்து 2015 தேர்தலிலும் ஆம் ஆத்மியே வென்றது. 2020 தேர்தலையும் ஆம் ஆத்மி கட்சியே வென்று சாதனை படைத்தது. 3 முறை முதல்வராக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். கடைசி சில மாதங்கள் அதிஷி முதல்வராக இருந்தார்.  இந்த நிலையில் தற்போது டெல்லி மீண்டும் பாஜக வசம் வரும் சூழல் உருவாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்