பாஜக தனித்துப் போட்டியிட்டால் என்னாகும்.. அதிமுக செம ஹேப்பியா இருக்கு போலயே!

Su.tha Arivalagan
Mar 19, 2023,11:53 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிடவே விரும்புகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அப்படி நடந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதை அதிமுக தரப்பில் பலரும் வேகம் வேகமாக வந்து வரவேற்பதைப் பார்த்தால் அதிமுகவுக்கு பாஜகவை விட்டால் போதும் என்ற மன நிலையில் இருப்பது புரிகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா மறைந்த பின்னர் தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அப்போது சசிகலா தலைமைக்கு அதிமுக மாறியது. சசிகலா தானே முதல்வராக ஆசைப்பட்டார். இதற்காக ஓ.பி.எஸ்ஸை அவர் விலக நிர்ப்பந்தித்தார். ஆனால் அவர் விலக மறுத்தார். ஆனால் சசிகலா தரப்பும் விடவில்லை.

இதனால் கூவத்தூர் கூத்து அரங்கேறியது. ஓ.பி.எஸ். பதவி விலகினார். ஆனால் தர்மயுத்தத்தில் குதித்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை உறுதியானது. இதை அவரும் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியில்லாமல், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டு அவர் சிறைக்குப் போனார். சிறைக்குப் போய் விட்டுத் திரும்பி வந்த அவர் மொத்த செல்வாக்கையும் இழந்து நின்றார். 





மறுபக்கம் முதலில் ஓபிஎஸ்ஸிடமும் பின்னர் எடப்பாயிடமும் கடுமையாக மோதி வந்த டிடிவ��� தினகரன் எதுவுமே பலனளிக்காமல் தனது தளபதிகள் பலரையும் மாற்றுக் கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு சைலன்ட்டாக அமமுகவை நடத்தி வருகிறார். இந்தப் பக்கம், எடப்பாடியுடன் கை கோர்த்து செயல்பட்டு வந்த ஓபிஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார். அடுத்து என்ன கிளைமேக்ஸ் என்பதுதான் இந்த "அரசியல் படம்" குறித்த மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த திரில்லான படத்தின் மொத்தத் திரைக்கதையும் பாஜகதான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள். பாஜகவின் உத்தரவின்றி அதிமுகவில் ஓரணுவும் அசையாது என்பது அவர்களது அழுத்தம் திருத்தமான நம்பிக்கை. மக்களும் கூட  அப்படித்தான் நினைக்கிறார்கள்.  ஆனால் பாஜகவே எதிர்பாரத பல திருப்பங்களை அதிமுக அவ்வப்போது தந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை விட்டு விலகுவேன் என்று அண்ணாமலை கூறியதாக வந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை அதிமுக தரப்பில் பலரும் வரவேற்றுள்ளனர். இதுதான் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எப்படிப்பட்ட கட்சி நாம், நம்மைப் பார்த்து கலைஞரே மிரண்டார், ஜெயலலிதா இருந்தவரை யாராலும் அவரை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.. அப்படிப்பட்ட கட்சி பாஜகவிடம் அடிமை போல இருப்பதா என்ற வருத்தமும், கோபமும் இன்றும் கூட தொண்டர்களிடம் உள்ளது.

ஆனால் தலைவர்கள் சிலர் எடுத்த முடிவுகளும், அவர்களது இயலாமையும்தான் அதிமுகவை பலமிழக்க வைத்து விட்டதாக தொண்டர்கள் குமுறுகின்றனர். பாஜகவைத்தான் அவர்கள் காரணமாகவும் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது என்ற நிலை ஏற்பட்டால் அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி  அடையவே செய்வார்கள் என்பது எதார்த்தமான உண்மை. காரணம்,  பாஜகவுடன் இணைந்திருப்பதால் அதிமுகவையும் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதுதான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பறி கொடுக்க முக்கியக் காரணம். அப்படியும் கூட கணிசமான தொகுதிகளை அதிமுக வென்றுள்ளதால், தொண்டர்களின் முழு ஆதரவையும் அதிமுக இழக்கவில்லை. அதேசமயம், பாஜகவை விட்டு அதிமுக விலகினால், ஒருமித்த பலத்தோடு மக்களை சந்தித்தால் நிச்சயம் அது மீண்டும் ஆட்சியைக் கூட பிடிக்கும் என்ற நம்பிக்கையும் அதிமுகவினருக்கு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவினரின் வாய்களுக்கு அண்ணாமலை அவல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.