ராத்திரியில் சண்டை.. ஆத்திரத்தின் உச்சத்தில் மனைவி.. அடுத்தடுத்து 2 மரணங்கள்!
Aug 27, 2023,10:53 AM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் அருகே அடிக்கடி தன்னுடன் சண்டை போட்ட கணவரை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தானும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் மனைவி.
கணவன் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார் அந்தப் பெண். கணவரைக் கொன்ற பின்னர் வீட்டுக்குள்ளேயே துணியைப் போட்டு மூடி வைத்துள்ளார். அதன் பின்னர்தான் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கூடக்காரச்சி கொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. 45 வயதான இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அடிக்கடி ரங்கசாமி - ஜெயந்தி இடையே தகராறு ஏற்படுவது வழக்கம்.
எப்போது பார்த்தாலும் சண்டை போட்டபடியே இருப்பார்களாம் . சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குப் போன ஜெயந்தி, ரங்கசாமியை கீழே தள்ளி அருகே கிடைந்த கயிற்றை எடுத்து கழுத்தைப் போட்டு இறுக்கியுள்ளார். இதில் ரங்கசாமி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடலை இழுத்துப் போட்டு மூடி விட்டார்.
காலையில் பிள்ளைகள் எழுந்து அப்பா எங்கே என்று கேட்டபோது ஏதோ சொல்லி மழுப்பியுள்ளார். ஆனால் மகள் தீபிகாவுக்கு ஏதோ சந்தேகம் வந்துள்ளது. அவர் நேராக ரங்கசாமியின் வீட்டுக்குப் போய் தனது பாட்டியிடம் அப்பாவைக் காணவில்லை, அம்மா சரியாக பேச மாட்டேன் என்று சொல்கிறார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாட்டியும், பேத்தியும் வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு வீட்டைத் தேடியபோது ரங்கசாமியின் இறந்த உடல் துணிக்குள் மூடப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்து அலறித் துடித்தனர். இந்த நிலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றுக்குள் ஜெயந்தி குதித்து விட்டார். அவரை மீட்க முயற்சித்தபோது அதற்குள் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்து போய்விட்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த இரு மரணங்களும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரத்தில் நடந்த ஒரு கொலையும், அதைத் தாங்க முடியாமல் நடந்த தற்கொலையும் இரு அப்பாவிக் குழந்தைகளை அநாதரவாக்கியுள்ளது.
கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் பேசாமல் சற்று நேரம் வெளியே போய் விடுங்கள்.. இல்லையா.. பேசாமல் வாய் மூடி இருந்து விடுங்கள்.. ஒருவர் ஓய்ந்தால் கூட போதும், மற்றவரும் சிறிது நேரம் கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்.. அதன் பிறகு ஆற அமர்ந்து பேசி முடிவெடுங்கள்.. ஆத்திரத்தில் எது செய்தாலும் அது இப்படிப்பட்ட விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.. ஆனால் அதை நிதான மன நிலையில் எடுத்தால்தான் உண்மையான தீர்வாக அமையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.. உயிர் மிக மிக அருமையானது.. அதை இப்படி வீணாக்கி விடாதீர்கள்.