மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
குள்ளஞ்சாவடி: கணவனுக்கு பிடித்த மீன் குழம்பில் விஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடலூர் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த விஜயாவும் கூட இந்தத் தினத்தைக் கொண்டாட முடிவு செய்தார்.. அதுவும் தனது கள்ளக்காதலருடன்.. அதற்காக அவர் செய்த வேலைதான் இப்போது அவரையும், கள்ளக்காதலரையும் கம்பி எண்ண வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகில் உள்ள கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவருக்கு வயது 50. இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு 48 வயதில் விஜயா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு குழைந்தைகள் இல்லை. கோயம்புத்தூரில் வேலை செய்துவரும் இவர் மாதம் ஒரு முறை மட்டும் வந்த மனைவியை பார்த்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில். விஜயாவிற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் தேவநாதனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தேவநாதனுக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளன. இது குறித்து கோபாலகண்ணனின் தந்தை மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த செய்தி அறிந்த கோபாலகண்ணன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபாலகண்ணன் கடந்த சில மாதங்களாக கோயமுத்தூர் செல்லாமல், வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு எடுத்துக்கூறியும் விஜயா கேட்காமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது.
இந்நிலையில், கோபாலகண்ணன் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். கோபாலகண்ணனின் உறவினர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு கோபாலகண்ணனின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த குள்ளஞ்சாவடி போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்தனர். போலீசார் செய்த விசாரணையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய மனைவியும், கள்ளக்காதலனும் திட்டம் தீட்டியதும், அதற்காக கோபாலகண்ணனுக்கு மிகவும் பிடித்த மீன் குழம்பு வைத்து அதில் பூச்சி மருத்தை கலந்து விஜயா கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்தும் விஜயா மற்றும் அவரது கள்ளக்காதலன் தேவநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.