கைம்பெண்களை கோவிலுக்கு வரக் கூடாது என சொல்வது சட்டவிரோதம்.. ஹைகோர்ட் அதிரடி

Su.tha Arivalagan
Aug 05, 2023,03:48 PM IST
சென்னை: எத்தனைய சமுதாய சீர்திருத்தங்களை நாம் சாதித்தும் கூட, நாகரீக  சமுதாயமாக மாறியும் கூட இன்னும் சில ஆண்கள் கைம்பெண்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்று தடுக்கும் செயலும் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. அப்படிச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவைச் சேர்ந்த தங்கமணி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத்  தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தனது கணவர் பெரியகருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்தார். தற்போது மரணமடைந்து விட்டார். அந்தக் கோவிலில் ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆடி மாத திருவிழா நடைபெறவுள்ளது. இதில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளக் கூடாது என்று அந்த ஊரைச் சேர்ந்த  அய்யாவு மற்றும் முரளி ஆகியோர் மிரட்டுகின்றனர்.



நான் கணவரை இழந்த கைம்பெண் என்பதால் நான் கோவிலுக்கு வரக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். வந்தால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து நான் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், நான் கோவிலுக்குச் செல்லும்போது பாதுகாப்பு தர வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கோவிலுக்கு அவர்கள் செல்லும்போது உரிய பாதுகாப்பு அளிக்க சிறுவாலூர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.  மேலும் சிறுவாலூர் இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட அய்யாவு, முரளி ஆகியோரை வரவழைத்து, தங்கமணியையும், அவரது மகனையும் கோவிலுக்கு வருவதை தடுக்கக் கூடாது, அப்படி செய்வது சட்டவிரோதம் என்று தெரிவிக்க வேண்டும்.

அய்யாவு, முரளி ஆகியோர் பிரச்சினை ஏற்படுத்த முயன்றால், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்தால் அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரும், அவரது மகனும் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதை யாரும் தடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக  நீதிபதி தீர்ப்பை அளித்தபோது பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்தார். அதில், இதுபோன்ற மூடத்தனங்களை ஒழிக்கத்தான் எத்தனையோ சமுதாய மறுமலர்ச்ச்சிகளை,  சீர்திருததங்களை நாம் கொண்டு வந்தோம். அப்படி இருந்தும் கூட சில கிராமங்களில் இதுபோன்ற மூடத்தனங்கள் நீடிப்பது வருத்தம் தருகிறது.

தனது வசதிக்காக ஆண்கள் ஏற்படுத்திய விதிமுறைகள்தான் இவை.  ஒரு பெண் அவரது கணவரை இழந்து விட்டால் அவரை தீண்டத்தகாதவர் போல பார்க்கிறார்கள். இது பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும். நாகரீகமடைந்த சமுதாயத்தில் இது தொடருவதை ஏற்கவே முடியாது. இந்த சமுதாயத்தில் சட்டம்தான் உயர்ந்தது.  இதுபோன்று கைம்பெண்கள் கோவிலுக்குள் வருவதை யாரேனும் தடுக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு அவர்கள் பெண்கள் என்பதுதான் அடையாளம், அந்தஸ்து. அதைத் தாண்டி வேறு எந்த வகையிலும் பெண்களை அடையாளப்படுத்திப் பார்க்கக் கூடாது. கைம்பெண் என்பது அவர்களது அடையாளம் அல்ல.  அவருக்குத் திருமணம் ஆகியிருக்கிறதோ, இல்லையோ.. அதை அடையாளமாக பார்க்கக் கூடாது. கடவுளை வணங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதைத் தடுக்கும் உரிமை முரளிக்கோ, அய்யாவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ கிடையாது என்று நீதிபதி அழுத்தம் திருத்தமாக கூறினார்.

பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணிலேயே இப்படி ஒரு மூடத்தனம் + மடத்தனம் இருப்பது ஆச்சரியம்தான்!