திருச்செந்தூர் தெய்வானைக்கு திடீரென அவ்வளவு கோபம் வரக் காரணம்.. பாழாய்ப் போன அந்த செல்பிதான்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய கோவிலில் யானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகும். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 26 வயதாகும் தெய்வானை என்ற யானை ராஜகோபுரம் அருகே தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் பராமரிப்பு பணிகளில் பாகங்கள் செந்தில் மற்றும் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக உதயகுமார்(46) என்ற பாகன் ஈடுபட்டு வருகிறார். நேற்று மதியம் யானை பாகன்களான செந்தில்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணி முடிந்து மதிய வேளையில் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் உதயகுமாரும், அவரது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன் என்பவரும் யானை கட்டி வைத்த மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன் என்பவரை யானை தாக்கியது. அவரைக் காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் தாக்கியது. இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த கோவிலில் உள்ள சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது யானை தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
யானை தாக்கி பாகன் உட்பட இருவரும் உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பக்தர்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கோவில் நடை 45 நிமிடம் சாற்றப்பட்டது. பின்னர் கோவிலில் சாந்தி பூஜை மேற்கொள்ளப்பட்டு நடை திறந்து பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தெய்வானைக்கு கோபம் வரக் காரணம் என்ன
இந்த நிலையில் யானை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த வன அலுவலர்கள் ரேவதி ரமணன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பெண் யானைக்கு மதம் பிடிக்காது. பாகன் உட்பட இருவர் எதனால் உயிரிழந்தனர் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. உதயக்குமாரின் சொந்தக்காரர்தான் சிசுபாலன். சிசுபாலன் கோவிலுக்கு வந்த இடத்தில் யானை அருகே நின்று நீண்ட நேரமாக செல்ஃபி எடுத்துள்ளார். வளைத்து வளைத்து அவர் செல்பி எடுத்துள்ளார் போல. அதன்பின் யானையையும் தொட்டுள்ளார். இதை தெய்வானை விரும்பவில்லை என்று தெரிகிறது. விலங்குகளைப் பொறுத்தவரை பழகியவர்களை மட்டுமே அது அருகே வர அனுமதிக்கும். ஆனால் சிசுபாலன் புதியவர் என்பதால் அவர் தன்னைத் தொட்டதை தெய்வானை விரும்பவில்லை. இதனால் அவரை அப்படியே துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டு மிதித்து விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உதயக்குமார், வேகமாக ஓடி வந்து சிசுபாலனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் தெய்வானைக்கு இருந்த கோபத்தில் பாகன் என்றும் பாராமல் அவரையும் தாக்கி விட்டது. ஆனால் தாக்கிய பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை.. உதயக்குமாரை துதிக்கையால் எழுப்ப முயன்றுள்ளது. தன்னை வளர்த்தவரை தாக்கி விட்டோமே என்று யானை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தன்னை வளர்த்த பாகனை தாக்கிய விரக்தியில் கீழே விழுந்து கிடந்த சிசுபாலனை மீண்டும் தாக்கியதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்து போனார்.
செல்பி எடுப்பது ஒரு வகை மன நோயாகவே மக்களிடம் மாறி விட்டது. எடுக்க வேண்டியதுதான்.. ஆனால் இடம் பொருள் இல்லையா.. மலை உச்சியில் போய் நின்று எடுப்பது, பிறகு கீழே விழுந்து உயிரிப்பது.. புயல் நேரத்தில் கூட சென்னையில் கடலுக்கு அருகே போய் செல்பி எடுத்து பலர் உயிருடன் விளையாடினர். இப்போது ஒரு யானையையே இந்த செல்பி கோபமாக்கி விட்டது. அத்தோடு தன்னை அனுமதி இல்லாமல் தொட்டதால்தான் அது கடும் கோபமடைந்துள்ளது. யானையாக இருந்தாலும் அதுவும் பெண் தானே!
இதுபோன்ற இடங்களுக்குச் செல்வோர் தேவையில்லாத வேலைகளில் ஈடுபடக் கூடாது. மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்