அஸ்வினை ஏன் சேர்க்கலை.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. இவிங்க எப்பவுமே இப்படித்தானே!
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாமல் போயிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏன் இப்படி ஒரு குழப்பம் என்று பலரும் கேள்வி கேட்டு தேர்வை விமர்சித்து வருகின்றனர்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர். அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இது பலரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும் கூட அஸ்வின் சேர்க்கப்படாமல் கைவிடப்பட்டார். அப்போது அது மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்போது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அஸ்வினை சேர்க்காமல் விட்டுள்ளனர்.
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் சிறந்த ஆல் ரவுண்டர். குறிப்பாக உள்ளூரில் அவர் மிகச் சிறந்த வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். தைரியமாக அவரை நம்பி விடலாம். பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் திறமையானவர். இப்படிப்பட்டவரை அணியில் சேர்க்காமல் விட்டது தவறான முடிவு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணித் தேர்வு எப்பவுமே இப்படித்தான். நல்ல பார்மில் உள்ள, நன்றாக விளையாடக் கூடிய வீரர்களை சேர்க்கத் தவறி விடும். மாறாக, சொதப்பலான அணியைத் தேர்வு செய்து, போய் கப் அடிச்சுட்டு வாங்கன்னு சொல்வாங்க. எப்பவுமே இவர்கள் இப்படித்தானே என்று பலர் வெறுப்பாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அணியில் கே.எல். ராகுலை சேர்த்துள்ளதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டிலும் ராகுல் சேர்க்கப்பட்டு ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது சமி, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அஸ்வின் மட்டுமல்லாமல், யுஸ்வேந்திர சஹலும் கூட அணியில் சேர்க்கப்படவில்லை. இதுவும் கூட வியப்படைய வைத்துள்ளது. பார்மில் இல்லாத கே.எல். ராகுலுக்குக் காட்டிய பரிவை பார்மில் உள்ள அஸ்வினுக்கு காட்டாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல சஞ்சு சாம்சனையும் சேர்க்காமல் விட்டுள்ளனர். அவர் சமீப காலமாக உரிய முறையில் அணியில் இடம் பெறாமல் ஓரம் கட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.