இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் செல்ல தடை.. கோர்ட் விதித்த தடையின் பின்னணி என்ன?
மதுரை: இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களும், இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று (ஜனவரி 30) அதிரடி தீர்ப்பு வழங்கியது. பழநி முருகன் கோவிலுக்கு மட்டும் தடை கேட்ட வழக்கில் நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தடை விதித்தது ஏன்? இதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
பழநி முருகன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிற மதத்தை சேர்ந்த சிலர் வின்ச்சில் செல்வதற்கு டிக்கெட் வாங்கி உள்ளனர். இவர்கள் இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்ட கோவில் நிர்வாகத்தினர் டிக்கெட்டை திரும்ப தரச் சொல்லி கேட்டுள்ளனர். ஆனால், இது சுற்றுலா தலம் என்பதால் தங்களுக்கு வருவதற்கு உரிமை உண்டு என அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியதால் பழநி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக பழநி கோவில் வளாகத்தில் பதாகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் என பழநியை சேர்ந்த செந்தில்குமார் என்பது ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி நேற்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
அந்த தீர்ப்பில், பழநி முருகன் கோவில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் மற்றும் இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கோவில்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது. இது அறிவிப்பு பலகைகள் கோவில்களின் நுழைவு வாசலில் வைக்கப்பட வேண்டும். பிற மதத்தை சேர்ந்தவர்கள் கோவில் கொடிமரத்தை தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்க வேண்டும்.
ஒருவேளை மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இந்து கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால், அவர்களுக்காக தனி பதிவேடு அனைத்து கோவில் நிர்வாகத்தினராலும் கையாளப்பட வேண்டும். அதில், இந்து அல்லத பிற மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கடவுள்கள் மீதும், அவர்களின் மத மற்றும் வழிபாட்டு முறைகளின் மீதும் தனக்கு நம்பிக்கை உள்ளது. அவற்றை மீறும் வகையிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டும் நடப்பேன் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்த பிறகே கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அனைத்துக் கோவில்களுக்கும் ஏன் இந்தத் தடை?
பழநி கோவிலுக்கு மட்டும் தடை கேட்ட நிலையில் அனைத்து கோவில்களிலும் தடை விதிக்க உத்தரவிட்டது ஏன் என்பது குறித்து நீதிபதியே விளக்கமும் அளித்துள்ளார். அதில் அவர், பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு மட்டும் தான் தடை கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கோவில்களுக்குள் அமர்ந்து பலர் மது அருந்துவது, அசைவம் சாப்பிடுவது போன்றவை தொடர்ந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிற மதத்தை சேர்ந்த சிலர் தங்கள் மதத்தின் புனித நூலுடன் கோவிலுக்குள் சென்றதுடன், அங்கு தங்கள் மத வழிபாட்டினையும் செய்துள்ளதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. கோவில்கள் என்பது வழிபாட்டிற்கான இடமே தவிர அது சுற்றுலா தலமோ, பொழுதுபோக்கிற்காக சுற்றிப் பார்க்கும் தலமோ கிடையாது. அவைகள் வழிபாட்டிற்குரிய புனிதமான இடங்கள்.
அத்துமீறுவோரால் வந்த பிரச்சினை
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்குள்ள கட்டிடக்கலை சிற்பங்கள், அவற்றின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தொல்லியல் துறையால் கட்டிடக்கலைகளை காண்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொடிமரத்தை தாண்டிச் சென்று உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. மற்ற மதத்தினருக்கு இருப்பதை போல் இந்துக்களுக்கும் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் உள்ளது. அது இந்துக்களின் அடிப்படை உரிமையாகும். இதில் மற்றவர்கள் தலையிடுவதும், அதை சீர்குலைக்க நினைப்பதும் தவறு. இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பிற மதத்தினர் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்றார்.