கேரளாவில் வீட்டுக்கு வீடு இசையமைப்பாளர் இருக்கிறார்.. அதான் என்னை கூப்பிட மாட்டேங்கிறாங்க.. இளையராஜா
துபாய்: கேரளாவில் இசை ஞானம் அதிகம் உண்டு. வீட்டுக்கு வீடு ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார். அதனால்தானோ என்னவோ என்னை அங்கு இசையமைக்க அவர்கள் கூப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் என்னை அழைத்தால் மீண்டும் மலையாளத்தில் இசையமைக்க நான் தயார் என்று இசைஞானி இளையராஜா கலகலப்பாக கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் நடந்த 43வது சர்வதேச புத்தக விழாவில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த அந்த கலந்துரையாடலின்போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இளையராஜா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மலையாள சினிமாவில் ஏன் நீங்கள் இசையமைப்பதில்லை என்று ஒருவர் கேட்டபோது அதற்கு சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்தார் இளையராஜா.
மலையாளிகள் நல்ல இசை ஞானம் மிக்கவர்கள். கேரளாவுக்குப் போனால் வீட்டுக்கு வீடு ஒரு இசையமப்பாளரைக் காணலாம். அதனால்தானோ என்னவோ என்னை அவர்கள் இசையமைக்க கூப்பிடுவதில்லை என்று நான் கருதுகிறேன். மலையாள சினிமாவில் மீண்டும் இசையமைக்க நானும் தயாராகவே இருக்கிறேன். அவர்கள் அழைத்தால் நிச்சயம் இசையமைப்பேன் என்றார் இளையராஜா.
தமிழைப் போலவே மலையாளத்திலும் சாதனை
தமிழைப் போலவே பல்வேறு மொழிகளில் மறக்க முடியாத எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. மலையாளமும் அதில் ஸ்பெஷலாக வரும். தமிழில் கொடுத்தது போலவே அவர் பிற மொழிகளில் கொடுத்த மிகச் சிறந்த பாடல்கள் எங்கு அதிகம் என்றால் அது மலையாளமாகத்தான் இருக்கும். ஒரு பாடல், இரண்டு பாடல் என்று அதை விரல் விட்டு எண்ணி விட முடியாது. அந்த அளவுக்கு மலையாளத்திலும் அபரிமிதாகவே தனது இசைப் பங்கை அளித்துள்ளார் இளையராஜா.
இளையராஜா இசைக்காக 5 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். இதில் தமிழுக்காக வாங்கியது இரண்டு விருதுகள் (சிந்து பைரவி மற்றும் தாரை தப்பட்டை). இதுதவிர தெலுங்கில் இரண்டு முறை விருது வாங்கியுள்ளார் (சாகர சங்கமம், ருத்ரவீணா). மலையாளத்திலும் ஒரு விருது அவருக்குக் கிடைத்துள்ளது. 2009ம் ஆண்டு வெளியான பழசி ராஜா படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை இளையராஜா பெற்றுள்ளார். இதுதவிர மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, இன்னதே சிந்த விஷயம் ஆகிய படங்களுக்காக அவர் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோல சம்மோகனம், காலாபாணி, கள்ளு கொண்டொரு பெண்ணு ஆகிய படங்களுக்காக கேரள மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார் இளையராஜா.
தமிழைப் போலவே, தெலுங்கைப் போலவே, மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்