தயிர் பாக்கெட்டில் "இந்தி"யைக் கலந்தது ஏன்.. பின்னால் இருக்கும் அரசியல் என்ன?
Mar 31, 2023,11:02 AM IST
சென்னை: தயிரில் தண்ணீரைக் கலக்கலாம்.. அது தாங்கும்.. ஆனால் வேறு எதைக் கலந்தாலும் அது கெட்டுப் போய் விடும்.. அதுபோலத்தான் இப்போது தயிரில் இந்தியைக் கலக்க முயன்று பல்டி அடித்துள்ளது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையகம்.
மத்திய பா.ஜ.க அரசு பல விதங்களில் இந்தி மொழியை திணிக்க முற்பட்டாலும், அதை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பது தமிழகமாக தான் இருக்கிறது. பாஜக என்றில்லை, இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோதும் தமிழ்நாடு வீறு கொண்டு அதை எதிர்த்தது.
எந்தவொரு மொழியையும் விருப்பப்பட்டு கற்கலாம், நாங்கள் இந்தியை வெறுக்கவில்லை. வரவேற்கிறோம். ஆனால் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு தரப்பில் எப்போதும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இது கல்வியாக இருந்தாலும், பயன்பாட்டில் உள்ள சொற்களாக இருந்தாலும் இந்தி மொழியை திணிப்பதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் பெரும்பாலும் எதிர்ப்பு கருத்தையே தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆவின் தயிர் பாக்கெட்களில் இந்தி சொல்லை பயன்படுத்துமாறு உத்தரவிட்டு மத்திய அரசு புதிதான வழியில் இந்தி மொழியை திணிக்க முற்படுவதாக ஓரிரு நாட்களாக எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என்று மட்டும் எழுதக் கூடாது என்றும், ‛தஹி’ என்று இந்தியில் எழுத வேண்டும், பிராக்கெட்டில் வேண்டுமானால் தயிர் என்று போட்டுக் கொள்ளலாம் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அறிவுறுத்தியிருந்தது.
தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு அவ்வமைப்பு கடிதம் அனுப்பியது. வழக்கமாக மேலே சொன்ன தயிர் பாக்கெட்களில் அந்தந்த மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தயிர் என்பதை குறிப்பிட்டு எழுதியிருக்கும். அப்படியிருக்கையில், திடீரென இந்தி சொல்லான ‛தஹி’ என்னும் சொல்லையும் சேர்க்க சொல்வது விமர்சனத்திற்கு உள்ளானது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் கர்நாடகாவிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. காரணம், பல தசாப்தங்களாக இந்தி திணிப்பை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. கர்நாடகாவும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்த்து வருகிறது. இந்தியாவிற்கு தேசிய மொழி என ஒன்றே இல்லை என்பது உலகறிந்த உண்மை என்றாலும், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தி மொழியை தேசிய மொழி போன்று கட்டமைத்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
தொடர் எதிர்ப்பால், தயிர் பாக்கெட்களில் இந்தி வார்த்தையை பயன்படுத்தும் உத்தரவு வாபஸ் பெற்றது அந்த அமைப்பு. இருந்தாலும், இது ஏன் நடக்கிறது என பார்த்தோமானால், இந்தியாவில் மாநில மொழி மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்ததாக இந்தி மொழியை மக்கள் அதிகம் பேசுவதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாநில மொழியோ, ஆங்கிலமோ தெரியாதவர்களும் புரிந்துக்கொள்ளும்படி இந்தி சொல்லை பயன்படுத்த உத்தரவிட்டிருக்கலாம் என்கின்றனர் சிலர்.