திரும்பிப் பார்க்க வைத்த இளையராஜா.. அப்படீன்னா கமல், ரஜினி யாரு?.. செம திரில்லிங்கா இருக்கே!
- அஸ்வின்
சென்னை: ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையே ஒரு மிகப்பெரிய அளவில் மகிழ வைத்திருக்கிறது நேற்று வெளியான ஒரு அறிவிப்பு.
இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை படமாக்கவுள்ளனர். அந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க உள்ளார். இதை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இயக்கியவர்தான் அருண் மாதேஸ்வரன். அப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்திலேயே தனுஷ் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம்தான் இந்த இளையராஜா வாழ்க்கை வரலாறு.
இந்த திரைப்படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இளையராஜா, கமல்ஹாசன், பாரதிராஜா என பலரும் வந்திருந்தனர். தனுஷின் மிக நெருங்கிய நண்பரான, இயக்குனர் வெற்றிமாறனும் வந்திருந்தார். வழக்கம் போல வேட்டி சட்டையில் வந்திருந்தார் தனுஷ். இப்பொழுதெல்லாம் தனுஷ் எங்கு சென்றாலும் வேட்டி சட்டையில்தான் வருகிறார். தனுஷ், இளையராஜாவின் தீவிர பக்தன், தீவிர ரசிகன். இவர்களது நட்பு குறித்து சொல்லிக் கொண்டே போகலாம்.
இளையராஜா மீது அவர் வைத்திருக்கும் மரியாதை பக்தி ஒருபோதும் குறைந்ததில்லை. இளையாரஜா மீது எப்பொழுதும் அவர் அந்த நன்றியுடன் இருப்பார். தனுசுக்காக இளையராஜா மாரி திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். அதேபோல, இளையராஜாவிற்காக தனுஷ் விடுதலை திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார். இந்த இரண்டு பாடல்களுமே செம ஹிட்டடித்தவை. இப்படி அவர்களது நட்பு வளர்ந்து கொண்டே போகிறது. அதற்கு மேலும் உரம் சேர்க்கும் வகையில் இப்போது இளையராஜாவாகவே நடிக்கப் போகிறார் தனுஷ்.
உண்மையில் தனுஷுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டம் என்று கூறலாம். இந்த திரைப்படம் தனுஷ் கரியரில் ஒரு வெற்றி திரைப்படமாக மட்டுமல்லாமல், பல தலைமுறைகளுக்கு இது பேசப்படும் படமாகவும் இருக்கும் என்று சொல்லலாம். ஏனென்றால் படம் முழுவதும் இசை வருவதைப் பார்த்திருக்கிறோம்.. பின்னணி இசையைக் கேட்டிருக்கிறோம்.. ஆனால் இசையாகவே மாறி வாழ்ந்து வரும் இளையராஜா பாத்திரத்தில் நடிப்பது மிகப் பெரிய விஷயம்.
இசைஞானியின் வாழ்க்கை வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. ஒரு சாமானியர், குக்கிராமத்திலிருந்து வந்த ஒருவர் பல பத்தாண்டுகள் இசை உலகையே கட்டி ஆள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்தப் படம் இசை ரசிகர்களுக்கு சிறந்த ஒரு பரிசாக இருக்கும். தமிழ் சினிமாவிற்கு தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்த ஒரு பெரிய ஜாம்பவான் இசை ஞானி அவர்களுக்கு இதை சமர்ப்பிப்பதில் தனுஷ் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே சந்தோஷத்துடன் பார்க்கிறது.
தனுஷுக்கு வெற்றி ஒன்றும் புதிதல்ல. அவர் ஏறுகின்ற ஒவ்வொரு படியிலும் வெற்றி இருக்கிறது. அதை அவர் ஒவ்வொன்றாக அடைந்து கொண்டே வருகிறார். அவர் அடைவதற்கு இன்னும் பல வெற்றிகள் இருக்கிறது. அதில் இந்த இளையராஜா படம் இன்னும் ஒரு படியாகும். இந்த படத்தை இளையராஜா ரசிகர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று விழாவின்போது குறிப்பிட்டார் தனுஷ்.. அதில் ஆச்சரியம் இல்லை. அவர் எந்த ரோலாக இருந்தாலும் ஈசியாக செய்யக் கூடியவர்தான். இசைஞானியாக அவர் வலம் வரப் போகும் ஒவ்வொரு காட்சியும், இசைஞானி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகுக்கும் ஒரு சமர்ப்பணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எல்லாம் சரி, இந்தப் படத்தில் கமல்ஹாசனாக, ரஜினிகாந்த்தாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் பெருமளவில் உள்ளது. காரணம், இளையராஜாவின் இசை இல்லாமல் இவர்களது படங்கள் முழுமை அடையாது.. இவர்கள் இல்லாமல் இளையராஜாவின் இசையும் முழுமை அடையாது.. எனவே இந்த சூப்பர் நட்சத்திரங்கள் பாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.