யார் இந்த பூர்னேஷ் மோடி?.. ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு மூல காரணம்!

Su.tha Arivalagan
Mar 25, 2023,12:16 PM IST
சூரத்: மோடி என்ற துணைப் பெயர் கொண்டவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பேசியது இந்த அளவுக்கு விபரீதமாக போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் பூர்னேஷ் மோடி, ராகுல் காந்திக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.

யார் இந்த பூர்னேஷ் மோடி?

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் பூர்னேஷ் மோடி. இவர் முன்னாள் பாஜக அமைச்சர். தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே இவரும் இளம் வயதில் டீ விற்றவர்தான். மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். மோடி சமூகத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்தவர்.



ஆரம்ப காலத்தில் சரியான வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கும் போய் பிழைத்துள்ளார் பூர்னேஷ் மோடி என்று சொல்கிறார்கள். 1992ம் ஆண்டு எல்எல்பி படித்தார். பின்னர் பாஜகவில் இணைந்து சாதாரண பூத் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி பின்னர் அமைச்சர் பதவி வரை உயர்ந்தவர். 

3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூர்னேஷ் மோடி.  சூரத் மாவட்டத்தில் பாஜகவின் ஓபிசி முகமாக இவர் இப்போது திகழ்கிறார்.  இவரை வைத்துத்தான் தற்போது ராகுல் காந்தியை வீழ்த்தியுள்ளது பாஜக.

ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன வார்த்தையை ஜாதி ரீதியான துவேஷமாக திருப்பி விட்டு தற்போது ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டார் பூர்னேஷ் மோடி.