கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள்.. யார் யார்?
டெல்லி: கத்தார் நாட்டு கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கத்தார் நாட்டு நிறுவனத்திற்காகப் பணியாற்றியபோது நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியத்தை இஸ்ரேலுக்குப் பகிர்ந்து உளவு பார்த்ததாக கூறி இந்த எட்டு அதிகாரிகளையும் கத்தார் கைது செய்தது. தற்போது இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு பேரும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எட்டு இந்தியர்களுக்கு கத்தார் கோர்ட் மரண தண்டனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த எட்டு அதிகாரிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கமாண்டர் பர்னந்து திவாரி, கமாண்டர் சுகுானகர் பகலா, கமாண்டர் அமீத் நக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பீரேந்திர குமார் வர்மா, கேப்டன் செளரப் வசிஷ்ட், மாலுமி ராகேஷ் கோபகுமார்.
இவர்கள் அனைவருமே நீண்ட காலம் இந்திய கடற்படையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள். பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தவர்கள் ஆவர். 2019ம் ஆண்டு புர்னந்து திவாரிக்கு சிறந்த வெளிநாட்டு இந்தியர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பெயரை வெளிநாடுகளில் சிறப்பாக பரப்பியமைக்காக இந்த விருது அளிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாகியுள்ள எட்டு முன்னாள் அதிகாரிகளும் தோஹாவைச் சேர்ந்த தாஹ்லா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனமானது, கத்தார் ராணுவத்துக்கு பயிற்சி, ஆலோசனை உள்ளிட்டவற்றை வழங்கும் அமைப்பாகும். இந்த நிறுவனத்தை ராயல் ஓமன் விமானப்படையின் முன்னாள் ஸ்குவாட்ரன் லீடர் கமிஸ் அல் அஜ்மி என்பவர்தான் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனமானது இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் கத்தார் அரசு இறங்கியது. நிறுவனமும் மூடப்பட்டு விட்டது. கமிஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கமிஸ் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். எட்டு இந்தியர்கள் மட்டும் சிக்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த எட்டு இந்தியர்களையும் காப்பாற்றும் முயற்சிகளில் மத்திய வெளியுறவுத்துறை இறங்கியுள்ளது. பல்வேறு சட்ட ரீதியான அணுகுமுறைகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளதால் எட்டு பேரும் பத்திரமாக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர்.