தெய்வீக அம்சம் பொருந்திய வெள்ளெருக்கு.. உயிரும் காக்குமாம்.. என்னென்ன இருக்கு தெரியுமா?

Su.tha Arivalagan
Apr 20, 2024,04:35 PM IST

- பொன் லட்சுமி


உலகில் பல கோடி வகையான செடி கொடி தாவரங்கள் என்று இருந்தாலும் அவற்றுள் தெய்வீக அம்சம் பொருந்தியது மட்டுமல்லாமல் உயிர் காக்கும் மூலிகையும் அடங்கிய செடி என்றால் அது இந்த எருக்கன் செடி தான்... அப்படி என்ன ரகசியங்கள் இந்தச் செடியில்  பொதிந்து இருக்கிறது  என்று பார்ப்போம் வாருங்கள்.


மருத்துவ குணங்கள் :-




பொதுவாக இந்த எருக்கன் செடியில்  பல வகை இருக்கிறது.. அவற்றில் முக்கியமாக இரண்டு  வகை உள்ளது ஒன்று சாலை ஓரத்திலும் காடுகளிலும் பார்க்கும் இடங்களிலும் தன்னிச்சையாக வளரக்கூடிய எருக்கன் செடி  இதில் உள்ள பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.. மற்றொன்று வெள்ளை  நிறத்தில் இருக்கும் இதற்கு வெள்ளெருக்கு என்று பெயர்.. இதில் வெள்ளருக்கன் செடி அற்புத ஆற்றல் கொண்ட தெய்வீக அம்சம் பொருந்திய  செடியாகும்.


இந்த எருக்கன் செடியில் எந்த பகுதியை உடைத்தாலும் அதிலிருந்து பால் வடியும், காலில் ஏதேனும் முள் குத்தி விட்டால் அந்த இடத்தில் இந்த  எருக்கன்  பாலை இரண்டு சொட்டு விடும் போது உடனடியாக வலி குறைந்து  விடும் சிறிது நேரத்தில் அந்த இடம் பழுப்பு நிறமாக மாறியதும் முள் வெளியே வந்துவிடும்.. கிராம புறங்களில் இன்றளவும் இந்த பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.


சிலருக்கு குதிகால் வலி அதிகமாக இருக்கும்  அவர்கள் தூங்குவதற்கு முன்பு  ஒரு செங்கலை சூடு செய்து அதன் மீது  எருக்கன் இலையை வைத்து வாட்டி  சூடு பொறுக்கும் அளவில்  அந்த இலையை குதிகாலின் மீது வைத்து ஒரு துணியை கட்டி  கொண்டு தூங்கச் செல்லுங்கள் காலையில் கட்டை அவிழ்த்து விடுங்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் செய்யும் பொழுது குதிகால் வலி இறந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடும்.


அதேபோல மழைக்காலத்தில்   சிலருக்கு சேற்றுப்புண் பிரச்சனை அதிகமாக இருக்கும் அவர்கள் இந்த எருக்கன் இலையை காம்பை நீக்கி அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வர விரைவில்  சேற்றுப்புண் பிரச்சனை சரியாகும். பாம்பு தேள் போன்ற விஷக்கடிக்கும் இந்த இலையின்  சாறையும் பயன்படுத்தலாம்.. பாம்பு கடித்து விட்டால்  எருக்கம் பூவுடன் வெற்றிலையும் சேர்த்து மென்று சாப்பிட்டால் விஷம் ஏறாமல் கட்டுப்படுத்தும்  அதன் பிறகு மருத்துவமனை கொண்டு செல்லலாம்.


குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் கிருமி பிரச்சனைகளுக்கு  தேனுடன் இந்த எருக்கம் இலைச் சாறை இருதுளி கலந்து கொடுக்கும்போது  வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும். மாதவிடாய் பிரச்சனை  அதிக உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு  இந்த  எருக்கன்  வேரை முறைப்படி பாதுகாப்பாக  சுத்தப்படுத்தி  பசுவின் கோமியத்துடன்  இரவு முழுவதும் ஊற வைத்து  பகலில்  அந்த வேரை மட்டும் எடுத்து காய வைக்க வேண்டும். இப்படி 21 நாட்கள்  காய வைத்து எடுத்த பிறகு அதனை  நன்றாக பொடி செய்து துணியின் மூலம் சலித்து எடுத்த பின்  வரும் சூரணத்தை இரு சிட்டிகை அளவு மட்டும் எடுத்து காலை மாலை என இருவேளை மோரில் கலந்து அருந்தி வரும்போது நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை அனைத்தும் சரியாகிவிடும்.


அதேபோல ஆண்களுக்கு ஏற்படும் தாம்பத்திய குறைபாடுகளுக்கு  இந்த வேரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கொதிக்க வைத்து பின் வெயிலில் காயவைத்து எடுத்து  பதப்படுத்தி வைக்கக்கூடிய இந்த சூரணம் தான்  ஆண்களுக்கு கிடைக்க கூடிய இயற்கையான அருப்பெரும் மருந்து. 


தெய்வீக அம்சம் பொருந்திய வெள்ளெருக்கு:-


வெள்ளெருக்கு வேர் தெய்வீக சக்தி வாய்ந்தது.. பொதுவாக  இந்த வெள்ளெருக்கு  (விலை மதிக்க முடியாத புதையல்கள், ரத்தினங்கள், சிலைகள்) போன்றவை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில்தான் இந்த வெள்ளருக்கு செடி வளரும் என்பது சங்க கால புராணங்களில் கூறப்படும் ஐதீகம். பிரபஞ்ச ஆற்றலை மிக எளிமையாக கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்த  வெள்ளெருக்குவிற்கு இருக்கிறது. நவகிரகங்களில் சூரியனின் ஆதிக்கமாக இருப்பது தான் இந்த வெள்ளெருக்கு செடி... விநாயகருக்கும் சிவபெருமானுக்கும் இந்த வெள்ளெருக்கு பூவில் மாலை கட்டி வழிபடலாம்.. இன்று பல வீடுகளில்  வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட  விநாயகர் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். அதேபோல வெள்ளெருக்கு பட்டையால் செய்யப்பட்ட திரியை கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும்போது சுபிட்சமான வாழ்வு கிட்டும்..


பொதுவாக நம்மில் பலருக்கு இந்த வெள்ளெருக்கு  செடியை வீட்டில் வளர்க்கலாமா என்பது குறித்த சந்தேகம் இருக்கிறது .. இந்த செடிக்கு குறைந்த அளவு நீர் இருந்தாலே போதும் 12 ஆண்டுகள்   நீர் இல்லாமல் கூட இந்தச் செடி வளரும் .. வெள்ளெருக்கு  இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்றும் நம்பப்படுகிறது.. மேலும் இது சிவனின் அம்சமாகவும் கருதப்படுவதால் இந்த செடியை வளர்ப்பவர்கள் தங்களையும்   இந்த செடி இருக்கும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. அப்படி வைத்துக் கொள்ள இயலாதவர்கள் வெள்ளெருக்கு வேர் கட்டையை வீட்டின் முன் கட்டி தொங்க விடுவதால்  தீய சக்திகள்  கண் திருஷ்டிகள் எதிர்மறை ஆற்றல் எதையும் வீட்டிற்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு கவசம் போல் காத்து நிற்கும்.


இயற்கை நமக்கு எவ்வளவோ மூலிகைகளை அளித்துள்ளது அவற்றில்  முக்கியமான ஒன்றுதான் இந்த வெள்ளெருக்கு  செடி.. இதில் மருத்துவ மட்டுமல்லாமல் ஆன்மீகமும் அடங்கியுள்ளது... இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த செடியை முடிந்த அளவு பயன்படுத்துங்கள்  வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.