சிவாஜி கணேசனைப் பார்த்து.. மர்லன் பிராண்டோ ஏன் அப்படிச் சொன்னார்?

Su.tha Arivalagan
Jul 21, 2023,02:22 PM IST
சென்னை: மக்கள் மனதில் நடிகர் திலகம் என்ற பட்டம் மட்டுமே நிரந்தரமாகிப் போனது சிவாஜி கணேசனுக்கு.. அவர் எத்தனையோ அவதாரம் எடுத்தாலும்.. அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு.. நீங்க எங்க மனசுல நிரந்தரமாக நடிகராக மட்டும் இருங்க என்று சொல்லி இன்று வரை அந்த இடத்தை விட்டு அவரை அகற்றாமல் ஒய்யாரமாக வைத்து ஆச்சரியப்பட்டு வருகிறது தமிழ் இனம்.

தமிழ் மக்கள் மத்தியில் சிவாஜி கணேசனுக்குக் கிடைத்த இடம் வேறு யாருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிரந்தரமான நடிகர் திலகமாக வீற்றிருக்கிறார் சிவாஜி கணேசன்.



சாதாரண நாடக நடிகராக வலம் வந்த சிவாஜி கணேசன், ஒரே படத்திலேயே ஸ்டார்  அந்தஸ்தைப் பெற்றது அந்த இயற்கை அவருக்குக் கொடுத்த வரமா அல்லது தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த பொக்கிஷமா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் சாதாரண கணேசன், சிவாஜி கணேசனாக மாறி மக்களை பல பத்தாண்டுகள் தனது நடிப்பால் மயங்கச் செய்தது என்னவோ உண்மை.

கட்டபொம்மன் இப்படித்தான் வீராவேசமாக பேசியிருப்பானோ, நடந்திருப்பானோ, சண்டை போட்டிருப்பானோ.. வெள்ளையர்களை வெளுத்து வாங்கியிருப்பானோ என்று கற்பனை செய்து பார்க்க வைத்தது சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன். வ.உ. சிதம்பரனாரை அப்படியே கண் முன் கொண்டு வந்து கொடுத்து, இப்படித்தாம்ப்பா நாம சுதந்திரம் பெற்றோம் என்று உணர்ச்சிவசப்பட வைத்தவர் சிவாஜி கணேசன்.



அவர் நடித்த ஒவ்வொரு படமும், அவர் பூண்ட ஒவ்வொரு வேடமும் தமிழத் திரை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மக்களுக்குமே மிகப் பெரிய விருந்தாக அமைந்தது. தங்கப் பதக்கம் சிவாஜி கணேசனின் கம்பீரத்தையும், கெத்தையும், துணிச்சலையும் வேறு எந்த போலீஸ் அதிகாரி வேடத்திலும் நம்மால் இன்று வரை காண முடியவில்லை.  கெளரவம் ரஜினிகாந்த்தின் ஸ்டைலை வேறு எந்த ஒரு நடிப்பிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.. பாசமலரில் உருகிய அண்ணனை இன்று வரை வேறு எந்த அண்ணனும் நமக்குக் காட்டியதில்லை.. சொல்லிக் கொண்டே போகலாம்.

ஹாலிவுட் ஹீரோ மர்லின் பிராண்டோவுடன் சிவாஜி கணேசனை ஒப்பிடுவார்கள்.. ஆனால் அந்த மர்லின் பிராண்டோ என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.. "சிவாஜி கணேசனால் என்னைப் போல நடிக்க முடியும். ஆனால் நிச்சயம் என்னால் சிவாஜி போல நடிக்க முடியாது"... சிவாஜி கணேசனின் நடிப்பின் வெரைட்டிக்கு இது ஒரு துளி பாராட்டுதான்.

நடிப்பின் நவரசத்தையும் தத்ரூபமாக பிழிந்து கொடுத்தவர் சிவாஜி  கணேசன்.  அவரது பாடி லாங்குவேஜுக்கு இணையான ஒன்றை அவரது காலத்தில் எந்த நடிகரிடமும் நாம் பார்க்க முடியவில்லை. இப்போதும் கூட பாடி லாங்குவேஜ் என்றால் அதற்கு லைப்ரரி சிவாஜி கணேசன்தான். தெய்வமகன் படத்தில் சிவாஜி தனது 3 கதாபாத்திரங்களுக்கும் காட்டிய உடல் மொழி இப்போது பார்த்தாலும் வியக்க வைக்கும். ஒரு மனிதனால் நடிக்க முடியும்.. ஆனால் இப்படி எப்படி நடிக்க முடியும் என்ற வியப்பு இன்று வரை விடை தெரியாத கேள்வியாகவே உலவிக் கொண்டுள்ளது.



நாடகத்தில் தொடங்கி சினிமாவில் விஸ்வரூபம் எடுத்த சிவாஜி கணேசன் அரசியலிலும் இருந்தார். பெருந்தலைவர் காமராஜரின் சிஷ்யராக கடைசி வரை இருந்த சிவாஜி கணேசன்,காங்கிரஸிலிருந்து விலகி பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். அது அவருக்கு வெற்றியைத் தரவில்லை.  பின்னர் ஜனதாதளத்திற்குப் போனார். அங்கும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட அவர், மக்கள் என்னை அரசியல்வாதியாக பார்க்க விரும்பவில்லை.. நான் நடிகனாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.. நான் அப்படியே இருந்து கொள்கிறேன் என்று கூறி அரசியலை விட்டு உடனடியாக வெளியேறிய நேர்மையாளர் சிவாஜி கணேசன்.

சின்னையாபிள்ளை கணேசனாக அக்டோபர் 1ம் தேதி 1928ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்த சிவாஜி கணேசன், 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இயற்கை எய்தினார். சிவாஜி கணேசன் மறைந்தாலும் கூட அவரது நடிப்பின் வீச்சும், வீரியமும் இன்று வரை சிலாகிக்கப்படுவதும், பேசப்படுவதுமே அவரது புகழுக்கான அங்கீகாரம்.