2008ல் ஆதிக் அகமதுவால் தப்பித்த மன்மோகன் சிங் அரசு.. 18 வயதில் முதல் கொலை!

Su.tha Arivalagan
Apr 17, 2023,09:22 AM IST
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஊடுறுவிய கொலைகாரர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிக்  அகமதுவால் 2008ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு தப்பிப் பிழைத்தது பலருக்குத் தெரிந்திருக்காது.

2008ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடந்து கொண்டிருந்தது. அப்போது சிவில் அணு ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட  இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் மன்மோகன் சிங் அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றனர். இதையடுத்து லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது லோக்சபாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் 228 உறுப்பினர்களே இருந்தனர். தனிப் பெரும்பான்மைக்கு 44 உறுப்பினர்கள் தேவைப்பட்டனர். இருப்பினும் நிச்சயம் தனது அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வெல்லும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபட தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் அடுத்தடுத்து பரபரப்பான சில சம்பவங்கள் நடந்தேறின. சமாஜ்வாடிக் கட்சி, மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது. அதேபோல அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம், தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவையும் ஆதரவைக் கொடுத்தன. 

அதற்கு அடுத்து நடந்ததுதான் சினிமாவில் கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாதது. 48 மணி நேர இடைவெளியில் இந்தியாவின் பல்வேறு சிறைகளிலிருந்து 6 முக்கியமான எம்.பிக்கள் ஜாமீனில் வெளியே எடுக்கப்பட்டனர். அனைவருமே கொலை, கொள்ளை, கலவரம், கடத்தல் உள்ளிட்ட மிகக் கடுமையான வழக்குகளில் சிக்கி கைதாகி உள்ளே இருந்தவர்கள் ஆவர். அப்படி வெளியே எடுக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆதிக் அகமது.

அப்போது சமாஜ்வாடிக் கட்சி எம்.பியாக இருந்தார் ஆதிக் அகமது. வெளியே வந்த ஆதிக் அகமது, மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசும் தப்பித்தது. என்ன விசேஷம் என்றால் இந்த ஆறு எம்.பிக்கள் மீதும் மொத்தமாக 100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருந்தன என்பதுதான்.

ஆதிக் அகமது 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2004ம் ஆண்டு எம்பி ஆனார்.  ஆனால் அவரது குற்றப் பின்னணி காரணமாக பின்னர் அவரை சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து நீக்கி விட்டனர்.  அதன் பின்னர் ஆதிக் அகமது சுயமாக ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். அரசியல்வாதி, காண்டிராக்டர், பில்டர், லேன்ட் புரோக்கர், விவசாயி என பல்வேறு அவதாரங்களை தனக்குத் தானே சூட்டிக் கொண்டவர். இவர் மீது கடத்தல், மிரட்டல், கொலை என நூற்றுக்கும்  மேற்பட்ட வழக்குகள் இருந்தன.

1979ம் ஆண்டு தனது 18 வயதில் முதல் கொலையைச் செய்து சிறைக்குப் போனவர் ஆதிக் அகமது.  அதுதான் அவரது முதல் கிரிமினல் வழக்கும் கூட. 90களில் பிரபலமாக ஆரம்பித்தார். 2000மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் உச்சத்திற்குப் போனார்.  அடுத்தடுத்து உ.பியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானபோதெல்லாம் இவருக்கு நிறைய வேலைகள் கிடைத்தன.

பிரக்யாராஜ் நகரின் நில அபகரிப்பு கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தவர் ஆதிக் அகமது. கிழக்கு உ.பியிலிலும் இவரது கை ஓங்கியிருந்தது. இவர் எம்.பியாக இருந்த தொகுதியின் பெயர் பூல்பூர்.. இது ஜவஹர்லால் நேரு வெற்றி பெற்ற தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு ராஜு பால் கொலை வழக்கில் சிக்கினார்.இதுதான் இவரது அரசியல் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. தொடர்ந்து உமேஷ் பால் கொலை வழக்கிலும் சிக்கினார்.  2008ம் ஆண்டு இவர் போலீஸில் சரணடைந்தார். சமாஜ்வாடிக் கட்சி இவரை கட்சியை விட்டு நீக்கியது.  அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஆதிக் அகமது 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

ஆதிக் அகமதுவின் சாம்ராஜ்ஜியம் மிகப் பெரியது. அவரது கும்பலில் 144க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவரது வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளேஅஞ்சினர். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிக் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மறுத்த கதையும் உண்டு. ஆதிக்கிடம் ரூ. 11,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளனவாம்.