சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்காவது மாடியில் இருந்து 7 மாத பெண் குழந்தை ஒன்று தவறி விழுந்தது நினைவிருக்கலாம்.. அந்தக் குழந்தையின் தாய் ரம்யா தற்போது தூக்கிட்டு தனது உயிரைப் போக்கிய செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் தன்னைப் பலரும் விமர்சித்ததால் மன உளைச்சலுக்குள்ளாகி அவர் தற்கொலை முடிவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். 37 வயதான இவர் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. ரம்யாவின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை. ரம்யா மற்றும் வெங்கடேஷ் இருவரும் ஐ டி துறையில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். அப்போது இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
சமீபத்தில் வெங்கடேஷ், ரம்யா தம்பதியினரின் ஏழு மாத பெண் குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4வது பால்கனி கூரையிலிருந்து திடீரென தவறி விழுந்தது. அப்போது அங்கு குழந்தை அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், நழுவி கீழே விழும் நிலையில் இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு வழியாக சில மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை காப்பாற்றினர்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்களின் அஜாக்கிரதையே குழந்தை விழுவதற்கு காரணம் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடா என்றெல்லாம் சிலர் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி விமர்சித்திருந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சமூக வலைதள டிரோல்களாலும், விமர்சனங்களாலும் கடும் மன உளைச்சலுக்குள்ளானார் ரம்யா. இதையடுத்து அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
அப்படியும் அவர் சரியாகாததால் சொந்த ஊரான காரமடைக்கு அழைத்து வந்தார் வெங்கடேஷ். அங்கு ரம்யாவின் பெற்றோருடன் தங்கியிருந்தால் சகஜ நிலைக்கு வருவார் என்பதற்காக இங்கு கூட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்யா வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இரு குழந்தைகளையும், கணவரையும் பரிதவிக்க விட்டு விட்டு இப்படி ஒரு விபரீத முடிவை எப்படி ரம்யா எடுத்தார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோத விமர்சனங்கள்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காரமடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.