தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்.. ஏன் இந்த பிரிவுகள்.. என்ன தான் காரணம் ?

Aadmika
Sep 10, 2024,06:12 PM IST

சென்னை:   தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்துக்களை அறிவிப்பது அதிகரித்து வருகிறது. இது அவர்களின் ரசிகர்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையே கலங்க வைத்து வருகிறது. இவர்களின் விவாகரத்திற்கு அப்படி என்ன தான் காரணமாக இருக்கும் என்பதை இங்கு சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.


நடிகர், நடிகைகள் என்றாலே, "அவர்களுக்கு என்னப்பா...கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். மகிழ்ச்சிக்கு என்ன குறை இருக்க போகிறது? ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டியது தான்" என பெருமூச்சு விடுபவர்கள் தான் அதிகம். ஆனால் பிரபலங்கள் என்பதை தாண்டி, அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்பதை பலரும் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். பணம், பெயர், புகழ் என்பது வேறு, சந்தோஷம், குடும்பம் என்பது வேறு என்ற உண்மை பலருக்கும் புரிவது கிடையாது. 




சினிமாவில் இருப்பவர்கள் அதே துறையை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் அவர்களுக்குள் வேலை காரணமாக போட்டி, ஈகோ காரணமாக மனக்கசப்பு ஏற்படும் என பொதுவான கருத்து நிலவுகிறது. நேரம் காலம் இல்லாம் ஷூட்டிங், ஷூட்டிங் என இருவரும் ஆளுக்கு ஒரு புறம் அலைய வேண்டி இருக்கும் என்பதால் அவர்களுக்கு புரிதல் என்பது இருக்காது என்ற கருத்தும் உள்ளது. ஆனால் விதி விலக்காக திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகளாக குடும்பம், குழந்தைகள் என ஒற்றுமையாக வாழும் தம்பதிகளும் தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் மட்டுமல்ல இப்போதும் இருக்கிறார்கள்.


சினிமாவில் திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையாக குடும்பம் நடத்தியதற்கு அந்த காலத்தில் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் விஜயக்குமார் - மஞ்சுளா, பாக்யராஜ்-பூர்ணிமா போன்றவர்களை சொல்லலாம்.  தற்போதைய காலத்தில் சூர்யா -ஜோதிகா, பிரசன்னா- ஸ்நேகா, அஜீத் - ஷாலினி போன்றவர்களை சொல்லலாம். 


1980 களில் மிக அரிதாகவே சினிமாவில் காதல் திருமணம், சில நாட்களில் விவாகரத்து என்பது நடந்தது. அப்படி பிரிந்த பிரபலமான ஜோடிகள் என்றால் ராமராஜன்-நளினி, பார்த்திபன் -சீதா ஆகியோரை சொல்லலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பது அதிகரித்து விட்டது. 


நடிகர் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர் இமான், நடிகர் தனுஷ் (இவர் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழ்கிறார்), நடிகைகள் சமந்தா, அமலா பால் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இத்தனைக்கும் தற்போது விவாகரத்தை அறிவிக்கும் பிரபலங்களில் பலர் சினிமா துறையை சாராதவர் தான்.  இருந்தும் திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இவர்கள் விவாகரத்தை அறிவிப்பதும், மன வேதனையுடன் பிரிவதாக கூறுவதும் பலரையும் குழப்பமடைய தான் வைக்கிறது. 




இது போன்ற பிரபலங்கள் பிரிவதற்கு அவர்களை பற்றி மீடியாக்களில் உலா வரும் கிசுகிசுக்களும் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ், நடிகை சமந்தா, நடிகர் ஜெயம் ரவி விஷயத்தில் நடந்ததும் இது தான். அந்த கிசுகிசுக்கள் பல நேரங்களில் உண்மையாகிறது., சில நேரங்களில் பொய்த்தும் போகிறது. நடிகர்-நடிகை இடையேயான நட்பு, அவர்கள் சேர்ந்து விழாக்களில் கலந்து கொள்வதையும் வைத்து கிசுகிசுக்கள் கிளப்பி விடுவது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை புகைச்சலை ஏற்படுத்த துவங்கி விடுகிறது. 


தற்போது அதிகரித்து வரும் போட்டி காரணமாக அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடிகர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை குறைத்து, திரைப்படங்கள் சார்ந்த விஷயங்களிலேயே மூழ்கி விடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் பெரிதாக புரிதல் இல்லாமல், மனதளவில் பிளவு, கசப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றிற்கு தூபம் இடுவதை போல் வரும் வதந்திகள், நடிகைகளுடன் நெருக்கம் இருப்பதாக பரவும் செய்திகள் பிரிவு உணர்வை அதிகமாக்கி, விவாகரத்தும் பிரிவும் மட்டும் தான் ஒரே வழி என முடிவெடுக்கும் நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்